இந்தியர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்புக் கோரியது அமெரிக்கா

Published:

suresh-bai-patel அமெரிக்காவில் இந்தியர் சுரேஷ் பாய் படேல் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் பாய் படேல்(57)-இன் மகன், மருமகள், குழந்தை ஆகியோர் அலபாமா மாகாணத்தில் மேடிசன் நகரில் வசித்து வருகிறார்கள். மகனுக்கும், மருமகளுக்கும் உதவுவதற்காகவும் குழந்தையை கவனிப்பதற்காகவும் சுரேஷ்பாய் படேல் அமெரிக்கா சென்றார். கடந்த 6 ஆம் தேதி சுரேஷ்பாய் படேல் தனது மகன் வீடு அமைந்துள்ள பகுதியில் நடந்து சென்றபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் நடமாடுவதாக காவல்துறைக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஆங்கிலம் தெரியாத காரணத்தால், அவர் பதில் அளிக்க திணறினார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் சுரேஷ்பாய் படேல் படுகாயம் அடைந்தார். அவரின் கால் எலும்பும் முறிந்தது. இது குறித்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானதுடன், இணையதளத்திலும் வெளியானது. இந்தச் செய்தி இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரியது. இதனிடையே சுரேஷ்பாய் படேல் உடல் நலம் தேறி, மறுவாழ்வு பெற வசதியாக பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது மருத்துவ சிகிச்சைக்காக ஆன்லைன் வழியாக 1 லட்சத்து 87 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 1 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரம்) நிதி திரண்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டதால், இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அட்லாண்டாவில் உள்ள இந்திய துணைத்தூதர் அஜித் குமாருக்கு அலபாமா மாகாண கவர்னர் ராபர்ட் பென்ட்லி மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த துயரச் சம்பவத்தில் உங்கள் அரசும், சுரேஷ் பாய் படேலும், அமெரிக்காவில் வசிக்கிற, வேலை பார்க்கிற இந்திய குடிமக்களும் எனது ஆத்மப்பூர்வமான மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சுரேஷ் பாய் படேல் மீது மேடிசன் காவல்துறையினர் அதிக அளவில் பலப்பிரயோகம் செய்து, அதனால் அவர் காயம் அடைந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். படேல் உடல் நிலை தேறி, அவர் கால்கள் முன்பு போல செயல்படுகிற நிலைவரும் என மனதார நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, கடந்த 13ம் தேதி, இந்தியர் சுரேஷ் பாய் படேல் அமெரிக்க காவலரால் தாக்கப்பட்ட விவகாரத்தில், அவரைத் தாக்கிய அமெரிக்க காவலர் பார்க்கர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய எப்.பி.ஐ., அவர் மீதான குற்றத்தை உறுதி செய்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க காவல் துறை அறிவித்த சில மணி நேரங்களில், கடைசியாக வெளியான தகவல் படி, அவர் 1000 டாலர் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Related articles

Recent articles

spot_img