
<- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ->
இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட், முதல் நாள் – 14.12.2022
சிட்டகாங்கில் நடைபெறுகின்ற வங்காளதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 278 ரன்கள் சேர்த்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்தது.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
இதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலியும் 1 ரன் எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்து வந்த புஜாராவும், ரிஷப் பண்ட்-ம் அணியை சரிவில் இருந்து சற்று மீட்டனர். அதிரடியாக ஆடி, 46 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் ஒரு மோசமான ஷாட் அடித்து வெளியேறினார்.
அதன் பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். ஷ்ரேயஸ் ஐயர் – புஜாரா ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 90 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த அக்சர் படேல் 14 ரன்களில் ஆட்டம் முடிவடையும்போது வெளியேறினார். இதையடுத்து இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தார்.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக தஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்னமும் ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆடவேண்டும்.