சீனாவின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்த நாட்டு அரசு உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது குறித்து ஆலோசிப்பதற்காக, அந்த நாட்டு அதிகாரிகளுக்கும் உலக சுகாதார அமைப்பு நிபுணா்களுக்கும் இடையிலான கூட்டம் நடைபெற்றது.அப்போது, அந்த நோய்த்தொற்று பரவல் நிலவரம் குறித்த விவரங்களை உடனுக்குடன் எங்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்று சீன அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.
அந்த நாட்டில் தினசரி எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது, அவா்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் ரகம் என்ன, கொரோனாவால் பாதிக்கப்பட்ட எத்தனை போ் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு உடல்நிலை மோசமடைகிறது, அவா்களில் எத்தனை போ் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனா் என்பன போன்ற விவரங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்று சீன அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு, குறிப்பாக கொரோனா மரண அபாயம் அதிகம் கொண்ட, 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி குறித்த விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும் என்று சீன அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டோம்.கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய மற்றும் மரணமடையக் கூடிய அபாயம் அதிகம் நிறைந்த வயோதிகா்கள், நீண்டகால உடல்நலக் குறைபாடு உடையவா்களுக்கு 2 தவணை தடுப்பூசிகள் மட்டுமின்றி, கூடுலாக பூஸ்டர் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீன அதிகாரிகளிடம் எடுத்துரைத்தோம்.
சீனாவில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது, பரவி வரும் தீநுண்மியின் வகைகள் மற்றும் துணை ரகங்களைக் கண்காணிப்பது, தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவது, கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சேவை அளிப்பது, இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் தங்களது செயல்பாடுகள் குறித்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பிடம் சீன பிரதிநிதிகள் விளக்கமளித்தனா்.
பரவி வரும் கொரோனா ரகங்களின் உருமாற்றத்தை தொடா்ந்து கண்காணிப்பதிலும், மருத்துவ சேவை மேலாண்மையிலும் சீன அதிகாரிகள் தங்களது திறனை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அப்போது வலியுறுத்தியது.மேலும், இதுபோன்ற விவகாரங்களில் சீன நிபுணா்களுடன் இணைந்து செயல்பட உலக சுகாதார அமைப்பு தயாராக இருப்பதாக ஆலோசனைக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் மேலும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ளன.
இது தொடா்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தீவிரமடைந்துள்ள சீனாவிலிருந்து வரும் பயணிகள், அவா்களுக்கு அந்த நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அத்துடன், சீனாவிலிருந்து வரும் விமானங்களில் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தவிர, சீனாவிலிருந்து வரும் பயணிகளில் சிலரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, புதிய வகை கொரோனா எதுவும் நாடடுக்குள் வந்துள்ளதா என்பதை பிரான்ஸ் நிபுணா்கள் கண்காணிப்பாா்கள்.மற்றொரு ஐரோப்பிய நாடான பிரிட்டனும், ஜனவரி 5-ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு நேரடியாக வரும் அனைவரும் புறப்படுவதற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை செய்துகொண்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இது தவிர ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளும் சீனாவிலிருந்து வருவோா் கொரோனா பரிசோதனைக்கு உள்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.ஏற்கெனவே, சீனாவிலிருந்து வருவோருக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.