இலங்கையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்கள் நிலையைக் கண்டறிய 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கை அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:
2009ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் பலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்றும், அவர்களைக் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில் போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து கண்டறிய சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கொண்ட அதிகாரிகளை நியமித்து அதிபர் சிறீசேன உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 3 வருடகாலத்துக்கு இவர்கள் இந்த பதவியில் இருப்பர். இவர்கள் அனைவரும் சட்ட நிபுணர் சாலியா பெய்ரிஸின் கீழ் பணியாற்றுவர். இவர்களில் இரண்டு பேர் தமிழர்கள். இந்த விசாரணை அமைப்பு சுதந்திரமான அமைப்பாக செயல்படும். அவ்வப்போது இலங்கை நாடாளுமன்றத்துக்கு இக்குழு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்.
2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போரில் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களை இந்த அமைப்பின் மூலம் தொடர்புடையவர்களின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டு சட்ட விவகாரங்களை எதிர்கொள்ளலாம்.



