சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் மரணம்: ஒபாமா, மோடி இரங்கல்

உலகம்

saudi-women-advisory1 ரியாத் சவுதி அரேபியா நாட்டின் மன்னர் அப்துல் லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 1 மணி்க்கு ( சவுதி நேரப்படி) காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில மாதங்களாக அவர், நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த மன்னராக, இப்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல்அஜிஸ் ( வயது 79 ) அவருக்குப் பின்னர் முடிசூட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் சவுதி மன்னராகப் பொறுப்பேற்றவர் அப்துல்லா. ஒபாமா இரங்கல்: சவுதி மன்னர் அப்துல்லா மரணத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இஸ்லாமிய உலகின் மிகப் பெரிய சக்தியாகத் திகழ்ந்தவர் அப்துல்லா. அவரது துணிவான நடவடிக்கைகளும் நட்புறவும் பாராட்டுக்குரியது. அமெரிக்க-சவுதி அரேபிய உறவுக்கு பாலமாகத் திகழ்ந்தவர் அப்துல்லா. அவரது மறைவு வேதனை அளிக்கிறது என்று அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இரங்கல் சவுதி மன்னர் அப்துல்லா மரணத்துக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், சவுதியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான நபரை நாம் இழந்து விட்டோம். அவரது மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவரை இழந்து தவிக்கும் சவுதி மக்களின் நிலை வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.