வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்க, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ இன்று வட கொரியா பயணமாக உள்ளார்
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ இன்று முதல் வெளிநாடுகளில் ஒரு வார கால சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
முதலாவதாக, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் முக்கிய நோக்கத்தை நிறுவேற்றும் வகையில் அவர் வட கொரிய தலைநகர் பியாங்கியாங் செல்கிறார்.
அங்கு, அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் அவரது குழுவினரைச் சந்தித்து அணு ஆயுத ஒழிப்புக்கான செயல்திட்டம் குறித்து பாம்பேயோ விவாதிப்பார். அதனைத் தொடர்ந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோ, வியத்நாம் தலைநகர் ஹனோய், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸ் ஆகிய நகரங்களில் அவர் ஒரு வார கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தனது அணு ஆயுதங்களை மறைத்து வைக்கவும், ரகசிய அணு ஆயுத உற்பத்தியகங்களை உருவாக்கவும் வட கொரியா திட்டமிட்டு வருவதாக கூறப்படும் உளவுத் தகவல்களை மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் முன்னேற்றத்தைக் கண்டுகொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என்றார் அவர்.
தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, அமெரிக்கா – வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது, போர் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது ஆகிய 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.



