ஜப்பானை வெள்ளக்காடாக மாற்றிய கனமழை தொடரும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு ஜப்பானில் பெய்துவரும் பெருமழையினால் அந்தப் பகுதி எங்கும் நீர் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற பெருமழையை தாங்கள் எதிர்கொண்டதே இல்லை என்று அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஹிரோஷிமா பகுதியில் உள்ள ஆறுகளின் கரை உடைந்ததில் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், டஜன் கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர்.
ராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மேற்கு மற்றும் தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி பிரதமர் ஷின்ஜோ அபே கூறும்பொழுது, இன்னும் நிறைய பேரை காணவில்லை. பலருக்கு உதவி தேவையாக உள்ளது. தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என கூறினார்.
ஜப்பானின் மேற்கு பகுதியில் சாலைகள் மூடப்பட்டு உள்ளன. சில பகுதிகளில் ரெயில் சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த வெள்ளி கிழமை ஷின்கான்சென் பகுதியில் ரத்து செய்யப்பட்ட புல்லட் ரெயில் சேவை ஆனது மீண்டும் தொடங்கப்பட்டு குறிப்பிட்ட நேரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.



