நாகூர் ஹனீபா மரணம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்

பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக, குவைத் இஸ்லாமியச் சங்கம் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா சென்னை, கோட்டூர் சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். அன்னாருக்கு வயது 96. வியாழக்கிழமை நாகை மாவட்டம், நாகூர் தர்காவில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை (10.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவுகூரப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.