குடும்பத் தகராறில் பேரனுடன் காருக்குள் தீவைத்து தற்கொலை செய்த தாத்தா

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் மேற்கு ஜோகனஸ்பர்க் பகுதியில் உள்ள ஆஸாத்வில்லி நகர்ப்புறத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசித்துவரும் இந்திய வம்சாவளி நபரான ஜுகுத்லே பெர்சாத்(64) என்பவருக்கும் இவரது மகளின் கணவரான மருமகனுக்கும் நீண்ட காலமாக தகராறு. தனக்குச் சொந்தமான வீட்டை விட்டு வெளியே போகுமாறு ஜுகுத்லே பெர்சாத் விரட்ட, போக முடியாது என மருமகன் மிரட்ட, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமே என சிந்தித்த ஜுகுத்லே பெர்சாத் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். நீங்கள் என் வீட்டை விட்டுப் போகவில்லை என்றால் உங்கள் மகனைக் கொன்று விடுவேன் என மகளையும், மருமகனையும் ஜுகுத்லே பெர்சாத் மிரட்டினாராம். ஆனால், அதற்கு அவர் உடன்படவில்லை. இந்நிலையில், நேற்று தனது 4 வயது பேரன் சிவன் மிக்கைல் மகராஜை காரில் ஏற்றி கடத்திச் சென்று, காருடன் தீ வைத்துக் கொளுத்தி விட்டு தானும் அதே காரில் தீக்குளிக்கப் போவதாக மகளுக்கு போன் செய்தார். அவர் குறிப்பிட்ட இடத்துக்கு சிவன் மிக்கைல் மகராஜின் பெற்றோர் வந்து சேருவதற்குள் முழுக்க கார் எரிந்து சாம்பலானது, அதனுள் ஜுகுத்லே பெர்சாத்தும் அவரது 4 வயது பேரனும் உடல் கருகி பலியாகிவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.