இலங்கையில் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இசுலாமியர்களின் ஆடைக் குறியீடாக தற்போதைய அடிப்படைவாத இயக்கங்களால் அறிவுறுத்தப் படும் புர்கா அணிந்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
இலங்கையில், அண்மைக் காலமாக இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இலங்கை நாட்டு கலாசாரத்தை நீக்கி விட்டு, அரபு நாட்டுக் கலாசாரத்தை இஸ்லாமியர்களிடம் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியராக மத மாற்றம் செய்யப்பட்ட பின்னர் பெண்களுக்கு முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு அங்கியான புர்கா அணிந்து வெளியில் செல்வது கட்டாயம் ஆக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்.21ஆம் தேதி இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் நிகழ்த்தப் பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து, இலங்கை அரசு இது போன்ற மத பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்லாமியர்களிடம் இருந்து பயங்கரவாதிகளை இனம் கண்டு அவர்களை அப்புறப் படுத்துவதற்கான பணிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.
மேலும், இஸ்லாமிய பெண்களும் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பதால், இனி இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்துக் கொண்டு புர்கா அணிந்து வெளியிடங்களில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், இதை அரசு அறிவிப்பாக நேற்று வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் புர்கா அணிந்து முகத்தை மூடுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இது குறித்த இலங்கை ஜனாதிபதி மைத்ரீபால சிறீசேன வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையும் வகையில் முகத்தை மறைப்பது நாளை முதல் தடை செய்ய நடவடிக்கை
தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளை பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்
அடையாளத்தை உறுதிப் படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபர் ஒருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு சமூக பிரிவையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமும் மிக்க சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
- என்று இலங்கை ஜனாதிபதி சிறீசேன பெயரில் ஊடகப் பிரிவு வெளியீடாக 28ஆம் தேதியிட்டு வெளியான ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.





