இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 21ம் தேதி, கிறிஸ்துவர்கள் ஏசு கிறிஸ்து உயிர்த்து எழுந்து வந்தார் என்று கருதிக் கொண்டாடும் கிறிஸ்துவ பண்டிகையான ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள மூன்று சர்ச்சுகள் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் உயர் தர நட்சத்திர ஓட்டல்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர் இதில் 250க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப் பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவங்களில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பு, சர்வதேச இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் உதவியுடன் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இந்த தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய ஒன்பது பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் ஒன்பது பேரின் புகைப்படங்கள், மற்றும் அவரது உறவினர்களின் விவரங்களை, போலீசார் வெளியிட்டனர்.
மேலும், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான இடங்கள், அவர்களின் சொத்துப் பட்டியல் இவற்றை விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர். அந்த சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் தற்போது அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மறு அறிவிப்பு வரும்வரை, இலங்கையில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கிறிஸ்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.



