இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்; கத்திரி வெய்யிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

summer - 2026

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், பெரியவர்களைப் பாதுகாக்க அறிவுரையும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

வருடம் தோறும் புவிக்கு மிக அருகில் சூரியரின் சஞ்சாரம் இருக்கும் மே மாத அக்னி நட்சத்திர வெய்யில் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஃபோனி புயல் வேறு மேலும் வெப்பத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. தமிழகம் நோக்கி வரக்கூடும், மழை பெய்யும் என்றெல்லாம் ஆசைகாட்டி மோசம் செய்து திசை மாறிச் சென்று ஒடிசாவையும் மேற்கு வங்கத்தையும் துவம்சம் செய்த ஃபோனி புயல், தமிழக கடற்கரைப் பகுதியை ஒட்டி காற்றின் ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துச் சென்றது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானது. வெய்யில் தகிப்பதால், பொதுமக்கள் அதிக அளவில் சிரமத்தைச் சந்தித்தனர்.

இந்நிலையில் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை மூன்று வாரத்துக்கு கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கத்திரி வெயிலின் காரணமாக தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் வானிலை வல்லுனர்கள்.

நேற்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரான்ஹீட் அளவை தாண்டி பதிவானது. அதிக பட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 111 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில் 108, மதுரையில் 107, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயிலின் தாக்கம் இருந்தது.

மதுரை, கரூர் பரமத்திவேலூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 104, பாளையங்கோட்டையில் 103, பரங்கிப்பேட்டையில் 102, தருமபுரியில் 101, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரான்ஹீட் என்ற அளவில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் கத்திரி வெயிலும் இன்று தொடங்கியுள்ளதால், பகல் நேரத்தில் வெளியில் செல்வோர் கூடுதல் எச்சரிக்கையுடனும் வெப்பத்தை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சிறுவர்கள், பெரியவர்களை கவனித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.