spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்ஐரோப்பிய ஒன்றியம்: உலகை அச்சுறுத்தும் தேர்தல்!

ஐரோப்பிய ஒன்றியம்: உலகை அச்சுறுத்தும் தேர்தல்!

- Advertisement -

தமிழக தேர்தல் தமிழ்நாட்டின் தலையெழுத்தை பாதிக்கிறது என்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் உலகையே அச்சுறுத்துகிறது!

சுமார் 40 கோடி வாக்காளர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 28 நாடுகள் கூட்டாக அமைத்துள்ள 751 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இதுவாகும். இந்திய தேர்தலுக்கு அடுத்ததாக, உலகின் மிகப்பெரிய தேர்தல் இதுதான்.

ஐரோப்பிய தேர்தல் முறை என்பது விகிதாச்சார தேர்தல் முறை (Proportional Representation – PR) ஆகும். இந்த தேர்தல் முறையில் ஒரேஒரு வாக்கு கூட வீணாவது இல்லை. எந்த கட்சி எத்தனை விழுக்காடு வாக்குகளை பெருகிறதோ, அத்தனை விழுக்காடு MP-களை பெறும். (இந்தியாவின் தேர்தல்முறை என்பது முதலில் வந்தவரே வெற்றி பெறுவார் (First Past the Post – FPTP) எனும் முறையாகும். மிகமோசமான இந்த தேர்தல் முறையில் பெரும்பாலான வாக்குகளுக்கு மதிப்பே இல்லை)

ஐரோப்பிய நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் ஒருபக்கம் உலகை அச்சுறுத்துவதாகவும், மறுபக்கம் ஓரளவுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளன. இந்த தேர்தலில் ‘வெளிநாடுகளில் இருந்து குடியேறியுள்ள மக்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் புவிவெப்பம் அதிகரிப்பதால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்ற பேராபத்து ஆகியனவே மிக முக்கியமான பிரச்சினைகளாக பேசப்பட்டன.

முஸ்லிம் எதிர்ப்பு: 

ஒருபக்கம் – வெளிநாடுகளில் இருந்து குடியேறும் மக்களுக்கு எதிரான, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சிகள் இந்த தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மிதமான தீவிரவாத நிலைப்பாடு கொண்ட EFDD கூட்டணி 48 இடங்களில் இருந்து 56 இடங்களுக்கு முன்னேறியுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சி இங்கிலாந்து நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மிக அதிக தீவிரவாத நிலைப்பாடு கொண்ட ENF கூட்டணி 18 இடங்களில் இருந்து 58 இடங்களுக்கு முன்னேறியுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளன.

ஆக மொத்தத்தில், ஐரோப்பிய ஒன்றியம் எனும் ஜனநாயக அமைப்புக்கு எதிரான, மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வலது சாரி தீவிரவாத கட்சிகள் 66 இடத்திலிருந்து 114 இடத்திற்கு முன்னேறி உள்ளன. குர்ஆனை தடை செய்ய வேண்டும், புர்க்கவை தடைசெய்ய வேண்டும், மசூதிகளை கட்டக்கூடாது என்பனவெல்லாம் இந்த கட்சிகளின் கோரிக்கைகள் ஆகும். (பிரான்சில் முதலிடம் பிடித்துள்ள மரீன் லே பென், 2017-ல் லெபனான் நாட்டில் முஸ்லிம் மதத்தலைவரை சந்திக்க தலையை மூடவேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க மறுத்தார். காண்க படம்)

இஸ்லாமிய சலாபிச தீவிரவாதம் தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் ஆகும். (‘சலாபிசம் வேறு, தீவிரவாதம் வேறு’ என்றுதான் சலாபிசத்தை நம்புகிறவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளை தாக்கும் மிகப்பெரும்பாலான தீவிரவாதிகள் சலாபிச நம்பிக்கையை சார்ந்தவர்கள் தான்).

காலநிலை மாற்றம்

மறுபக்கம் – காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரும் பசுமைக் கட்சிகளும் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய முதலிரண்டு நாடுகளான ஜெர்மனியில் இரண்டாம் இடத்தையும், பிரான்சில் மூன்றாம் இடத்தையும் பசுமைக் கட்சிகள் பிடித்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பசுமைக் கட்சிகள் 50 இடங்களில் இருந்து 70 இடங்களுக்கு முன்னேறியுள்ளன.

சுற்றுச்சூழலை காப்பதற்காக மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் கட்சிகளாகவும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை தீவிரமாக வலியுறுத்தும் கட்சிகளாகவும், எல்லாவற்றையும் விட – உலகை ஆட்டிப்படைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகத்தீவிரமான எதிரிகளாகவும் இருக்கும் பசுமைக் கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றிருப்பது முக்கியமானதாகும். மேலும், வலதுசாரி முஸ்லிம் எதிர்ப்பு கட்சிகளை பசுமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்க்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்காலம் என்ன?

கடந்த 40 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஆட்டிப்படைத்த பழமைவாத கட்சிகள் (EPP) மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள் (S&D), வரலாற்றில் முதன்முறையாக பெரும்பான்மையை இழந்துள்ளன. அதிலும் குறிப்பாக மிக முக்கிய நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்சிலும் – அந்த நாடுகளின் ஆளும் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி – வலதுசாரி தீவிரவாத கட்சிகள் முதல் இடத்தை பிடித்துள்ளன. இது அந்த நாடுகளின் பிரதமர் பதவிக்கான வருங்கால தேர்தலை கடுமையாக பாதிக்கும்.

அதே நேரத்தில், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பசுமைக் கட்சிகள் பெரிய வெற்றியை பிடித்திருப்பது மிகவும் நம்பிக்கை அளிக்கும் செய்தி ஆகும். ஆஸ்திரியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் பசுமைக் கட்சிகள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இங்கிலாந்தில் ஆளும் கட்சியை ஐந்தாம் இடத்துக்கு தள்ளி, பசுமைக் கட்சி நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

பசுமைக் கட்சிகளின் மிக முக்கியமான நோக்கம், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரும் 2015 பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதும், சுற்றுச்சூழலுக்கு எதிரான கார்ப்பரேட் முதலாளித்துவத்தை முறியடிக்க வேண்டும் என்பதுமாகும். இத்தகைய சூழலில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பாரம்பரிய கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பசுமைக் கட்சிகளின் 70 MP-கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்பது மிகப்பெரிய மாற்றம் ஆகும்.

மொத்தத்தில், வலதுசாரி முஸ்லிம் எதிர்ப்பு கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றாலும், பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட அளவு மாபெரும் வெற்றியை அவர்கள் அடையவில்லை. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர்களால் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது. அதே நேரத்தில் பசுமைக் கட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. பெரும்பான்மை இல்லாத பாரம்பரிய கட்சிகள் இனி பசுமைக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும் (ஐரோப்பிய நாடுகளில் கூட்டணி ஆதரவு என்பது கொள்கை செயல்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொள்கை உடன்பாடாக மேற்கொள்ளப்படும்).

28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றம் இனி எடுக்கப்போகும் முடிவுகள் இந்த உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் – இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகின்றன.

குறிப்பு: இந்த முடிவுகள் தேர்தலுக்கு பின்னாலான கணிப்புகள் ஆகும். ஐரோப்பிய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமானவை. அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் இதனை ஒட்டியே இருக்கும்)

– இர. அருள்     [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe