சென்னைப் பெண் நியூயார்க்கின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி

rajarajeshwari-american-judgeவாஷிங்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜ ராஜேஸ்வரி நியூயார்க் நகர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் பிறந்து 16ஆவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றவர் ராஜ ராஜேஸ்வரி. இவர்தான் இப்போது, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன் ரிச்மண்ட் கவுண்டியின் மாவட்ட அரசு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். அவரை நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ, நியூயார்க் நகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியாக நியமனம் செய்தார், அவர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். நீதிபதியாக தான் நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், இதை ஒரு கனவு போன்று உணர்கிறேன். இது என் கற்பனைக்கும் எட்டாதது. நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவள். இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் மேயரிடம் கூறியபோது, இது என் அமெரிக்கக் கனவு மட்டுமல்ல, வேறு எங்கோ ஒரு நாட்டின் மூலையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிவரும் ஏதோ ஒரு பெண்ணுக்கு இது தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். . என்று கூறினார். தற்போது, இரண்டு ஆண் இந்திய நீதிபதிகள்உள்ளனர். ஜெயமாதவன் நியூ யார்க் நகர ஹவுசிங் கோர்ட்டிலும், அனில் சி சிங், நியூ யார்க் நகர சுப்ரீம் கோர்ட்டிலும் பதவியில் உள்ளனர். சட்டத்துறை மட்டுமல்லாமல், அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள், ஆலய திருவிழாக்களில் பங்கேற்றுள்ள ராஜராஜேஸ்வரி பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களையும் அரங்கேற்றியுள்ளார். தனது தாயார் பத்மா ராமநாதன் பெயரால் பத்மாலயா டான்ஸ் அகாதெமியும் நடத்தி வருகிறார். இதன் மூலம் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.