அமைதியான ஆன்மிகவாதியாக தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கியவர்!

இலக்கியம் கட்டுரைகள்
maharishi - 2026

பிரபல எழுத்தாளர் மகரிஷி அண்மையில் சேலத்தில் காலமானார். ஒரு காலகட்டத்தில் ஆர்வி, பி,வி.ஆர், போல நிறைய எழுதிக் குவித்தவர். திரைத்துறையில் வெற்றிக்கொடி நாட்டியவர்.

`என்ன தான் முடிவு` என்ற திரைப்படம் அவரது `பனிமலை` என்ற நாவலின் திரையாக்கம் தான். `புவனா ஒரு கேள்விக்குறி` ரஜினிகாந்த் நடித்து மகரிஷி புகழை மேலும் உயர்த்தியது.

மகரிஷி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்னுமளவு அவரது எழுத்துக்களை அனைத்துப் பத்திரிகைகளும் விரும்பி வெளியிட்டன. அவர் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியான ஆன்மிகவாதியாகத் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிவந்தார்.

தி.ஜானகிராமன் மெளனி சுந்தரராமசாமி என அனைவர் எழுத்தையும் வரிவிடாமல் வாசித்து அனுபவித்தவர். லா.ச. ரா. பற்றிப் பேசத் தொடங்கினால் தன்னை மறந்துவிடுவார். லா.ச. ரா. எழுத்துக்களின் பரம ரசிகர்.. எப்போதாவது என்னுடன் தொலைபேசியிலும் உரையாடுவார்.

ஆழ்ந்த இலக்கியம் குறித்து அவரிடம் மணிக்கணக்கில் பேசலாம். அவர் சென்னை வந்த சில சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன்

சேலத்தில் அவர் இல்லத்திற்கு ஒரேஒரு முறை சென்று அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்,

அவரது மனைவி திருமதி பத்மாவதியும் மகன் ராமகிருஷ்ணனும் புதல்வி காயத்ரியும் அப்போது என்னிடம் காட்டிய அன்பை மறக்க முடியாது, ஓர் எழுத்தாளரின் குடும்பத்தினர் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என எண்ணி எண்ணி நான் மகிழ்ந்தேன்.

அவர் பிரிவிலிருந்து அவர் குடும்பத்தினர் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.