நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
பாடல் இடம்பெற்ற படம்:இரு வல்லவர்கள் (1966)
இயக்கம்: கே.வி.ஸ்ரீனிவாஸ்
நடிப்பு: ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி
படத்திற்கு இசை: வேதா
இந்தப் பாடல் இந்திப்பட பாடலின் மெட்டை தழுவியது…
தாமதமாக வந்த காதல் நாயகியிடம் நாயகன் தாமத்திற்கான காரணத்தை கேட்க… நாயகி பதில் சொல்வதுபோல் அமைந்த பாடல்…
காதல் களம் என்றால் கவியரசருக்கு சொல்லவா வேண்டும்!
வரிக்கு வரி தனக்குத்தானே போட்டிபோட்டுக் கொண்டு எழுதி இருக்கிறார். பாடல் வரிகளைப் பாருங்கள்…
நாயகனின் கேள்விகளாக….
‘நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?’
‘உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?’
‘உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?’
‘உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?’
நாயகியின் பதில் வரிகளாக…
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
கவிஞர் கண்ணதாசனின் காவியவரிகள் மயிலிறகாய் மனதை வருடுகிறது…
எத்தனை நயங்கள்? எத்தனை இலக்கிய அழகு?
இந்த இலக்கியச் சுவையை ஒரு திரைப்படப் பாடலுக்குள் வைக்கும் ரகசியம் கவிஞருக்கு மட்டுமே கைவந்த கலை!
“மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து”
- என்பது நளவெண்பா பாடல்.
வெண்பாவை வாசித்தல் என்பது முந்திரி நிறைந்த சர்க்கரைப் பொங்கலை பல்லிற்கும் நாவிற்கும் இடையில் நகர்த்திச் சுவைப்பதைப் போன்றது.
நளன் தமயந்தியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கையில், பெண்ணொருத்தி மலர் பறித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் முகத்தை தாமரை என்றெண்ணி வண்டொன்று மொய்க்கிறது. உடனே அவள் முகத்தைப் பாதுகாக்க கைகளால் வீசி உள்ளங்கை மூட, வண்டு கைக்குள் அகப்பட்டு விடுகிறது.
இப்போது வண்டு அவளின் சிவந்த நீண்ட கைவிரல்களை செங் காந்தள் மலர் என்றெண்ணி பயந்து விரைந்து வீர்றென்று வெளியேறிப் பாய்ந்ததால் வியர்த்துப் போகிறாள் அவள். (காந்தள் மலரில் வண்டுகள் மொய்ப்பது இல்லை)
அடடா என்ன கற்பனை…
புகழேந்திப் புலவரின் கைவண்ணம் இது.
இப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் சீண்டுவார் இன்றிப் போகிறதே என்று கண்ணதாசன் நினைத்திருக்கக் கூடும். தமிழனின் தமிழ்ச் செறிமான அளவை அறியாதவரா அவர்? எனவே தான் இந்த வெண்பாவை நாமும் ருசிக்கும் வண்ணம் இலகுவாக்கி…
“…பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…” என்று எழுதி இருக்கிறார்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத காதல் பாடல் அல்லவா? இசையின் கோர்வையும் கவிதையோடு கைகோர்த்தல்லவா பவனி வருகிறது?
பாடிய டி.எம்.எஸ் அய்யா – சுசீலாம்மா இருவரின் குரலும் தேன்தான். குறிப்பாக சுசீலாம்மா குரல் ஒருபடி மேலே… க்ரிஸ்டல் க்ளியர் வாய்ஸ்… இனிமை!
இரவின் மடியில் இளமை மழையில் நனைகின்ற போதெல்லாம்.. இதமான தென்றலாய்.. இப்பாடல் மனதில் ஒலிக்கிறது! கவியரசரின் கற்பனைத் திறனை, இலக்கிய நயத்தை எண்ணியெண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்