உலகக் கோப்பை தோல்வியுடன் டேனியல் வெட்டோரி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

உலகம்

vettori ஆக்லாந்து: நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி, இந்த உலகக் கோப்பை போட்டி தோல்வியுடன் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணி மெல்போர்னில் ஞாயிற்றுக் கிழமை விளையாடிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த அணி வீரர்கள் செவ்வாய்க்கிழமை இன்று காலை நியூசிலாந்தின் ஆக்லாந்து நக்ருக்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் வெட்டோரி, தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ‘‘உலகக் கோப்பை போட்டிதான் நியூசிலாந்து அணிக்காக நான் விளையாடிய கடைசி போட்டி. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அது சிறப்பானதாக முடிந்தது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’’ என்று அவர் கூறினார். தற்போது 36 வயதாகும் வெட்டோரி தனது 18 வயதில் 1997- பிப்ரவரியில் நியூசிலாந்து அணியில் இளம் வீரராக கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கினார். மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்ற வெட்டோரி, தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார். வெட்டோரி இதுவரை 4000 ரன்களும் அடித்து 300 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் 32 ஆட்டங்களில் விளையாடி 36 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் வெட்டோரி. இந்த உலகக் கோப்பை போட்டியில், சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் தொடர் வெற்றிக்குத் துணையாக இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.