சீனாவின் பிடியிலிருந்து இந்திய நட்புறவுக்கு! மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!

Image Tweeted by @ANI

சீனாவின் பிடியில் இருந்த மாலத்தீவில் தற்போது புதிய அதிபர் பதவி ஏற்றுள்ளார். அதிபர் பதவியேற்பு விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

மாலத்தீவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். தொடர்ந்து புதிய அதிபராக அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். தலைநகர் மாலேவில் நடைபெற்ற இந்தப் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்தினார்.

முன்னதாக, அண்மைத் தேர்தல் மாலத்தீவில் மக்களின் ஜனநாயகம் தழைத்ததைக் காட்டுகிறது. வளமான எதிர்காலத்துக்கு இது வழிவகுக்கட்டும். மாலத்தீவில் வலிமையான நேர்மையான ஜனநாயக ரீதியிலான வளர்ச்சியும் அமைதியும் திகழ இந்திய உறுதுணையாக இருக்கும்… என்று மாலத்தீவுக்கு விமானம் ஏறும் முன்னர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார் மோடி.

இதனிடையே, மாலத்தீவின் அழைப்பின் பேரில் நேரில் சென்று, அதிபர் பதவி ஏற்பில் கலந்து கொண்டார் மோடி. இந்தியா- மாலத்தீவுகள் இடையிலான உறவை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது மோடி தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு நவம்பரில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மாலத்தீவுக்குச் சென்றார். அதன் பின்னர், மாலத்தீவுகள் சீனாவின் பிடிக்குள் சென்றது. இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து ஒரு பிரதமராக மோடி இப்போது மாலத் தீவு செல்கிறார். பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் மோடி, மாலத்தீவுகளுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதும், மோடி இதுவரை செல்லாத தெற்காசிய நாடாக மாலத்தீவு மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.