
இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், டிடிவி தினகரன் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தில்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர். இதை அடுத்து சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று தில்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை தில்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின் இந்த வழக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது என கூறி தில்லி பாட்டியாலா நீதிமன்றம் தினகரனை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து,தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், டி.டி.வி. தினகரன் மீதுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்கு தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என பதிவிட்டுள்ளார்.
சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 17, 2018
இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்




NOBODY IS A CRIMINAL UNTIL IT IS DECLARED BY THE JUDICIARY.