கொரோனாவுக்கு எதிராக பாரதம் தொடுத்திருக்கும் போர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
mankibaat modi
mankibaat modi

நண்பர்களே, மற்றவர்களுக்கு உதவ, உங்களுக்கு உள்ளே, உங்கள் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஊற்றெடுக்கும் உணர்வு இருக்கிறது இல்லையா!! இது, இது தான் கொரோனாவுக்கு எதிராக பாரதம் தொடுத்திருக்கும் பெரும் போருக்கு பலம் அளித்து வருகிறது, இது தான் இந்தப் போரை உண்மையிலேயே மக்கள் இயக்கும் ஒன்றாக மாற்றி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டிலே இது எடுத்துக்காட்டாகவே மாறி இருப்பதோடு, தொடர்ந்து பலம் அடைந்தும் வருகிறது.

அது கோடிக்கணக்கானோர் எரிவாயு மானியத்தைத் துறப்பதாகட்டும், இலட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் ரயில்பயண மானியத்தை விட்டுக் கொடுப்பதாகட்டும், தூய்மை பாரதம் இயக்கத்துக்குத் தலைமை ஏற்பதாகட்டும், கழிப்பறைகள் கட்டுவதாகட்டும் – இப்படி எண்ணிலடங்கா விஷயங்களைக் கூறலாம். இந்த அனைத்து விஷயங்களிலிருந்தும் ஒன்று நன்கு தெரிய வருகிறது – நாமனைவரும், மனதால், ஒரு பலமான இழையால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு தேசத்துக்காக நமது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க இதுதான் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.

என் மனம்நிறை நாட்டுமக்களே, நான் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் மிகவும் பணிவோடும், மரியாதையோடும், இன்று, 130 கோடி நாட்டுமக்களின் இந்த உணர்வுக்குத் தலைவணங்குகிறேன், இதைப் போற்றுகிறேன். இந்த உணர்வுக்கு ஏற்ப, உங்கள் இயல்புக்கு ஏற்ற வகையிலே, உங்கள் நேரத்துக்குத் தக்க முறையிலே நீங்கள் பங்களிப்பு நல்க வேண்டும் என்பதற்காக, ஒரு டிஜிட்டல் தளத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தளத்தின் பெயர் covidwarriors.gov.in.

நான் மீண்டும் இதன் பெயரைக் கூறுகிறேன் – covidwarriors.gov.in. அரசாங்கம் இந்தத் தகவின் வாயிலாக அனைத்து சமூக அமைப்புக்களின் தன்னார்வத் தொண்டர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புக்கள் ஆகியோரை ஒருவரோடு ஒருவர் இணைத்திருக்கிறோம். மிகக்குறைந்த காலத்தில், இந்தத் தகவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி நமது ஆஷா பெண்கள், துணை செவிலியர் சகோதரிகள், நமது தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் நண்பர்கள், பல்வேறு துறைகளின் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் இந்தத் தகவினைத் தங்களுடையதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் உள்ளூர் அளவிலே நெருக்கடி நிலை மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் மிகுந்த உதவிகரமாக இருக்கின்றார்கள். நீங்களுமே கூட covidwarriors.gov.in தகவோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நாட்டுக்கு சேவை புரியுங்கள், நீங்களும் Covid Warriorஆக, கோவிடுக்கு எதிரான போராளியாக ஆக முடியும்.

நண்பர்களே, ஒவ்வொரு இடர்க்காலமும், ஒவ்வொரு போராட்டமும் ஏதாவது ஒன்றை நமக்குக் கற்பிக்கிறது, ஒரு கற்றலை அளிக்கிறது. சாத்தியக்கூறுகளுக்கான பாதையை அமைத்துக் கொடுப்பதோடு, சில புதிய இலக்குகளுக்கான திசையையும் துலக்கிக் காட்டுகிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டுமக்களான நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் மனவுறுதி வாயிலாக, பாரதத்தில் ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

நமது வியாபாரங்கள், நமது அலுவலகங்கள், நம்முடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவத்துறை என அனைத்தும் விரைவாக, புதிய தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கி முன்னேறி வருகின்றன. தொழில்நுட்ப நிலையில் என்று வரும் போது, நாட்டிலே புதுமைகள் படைப்போர், கண்டுபிடிப்புக்களில் ஈடுபடுவோர் என அனைவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையிலே புதிதுபுதிதாக ஏதோ ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.