ஆக்ரா நகரில் இரண்டே இரண்டு திருப்பங்கள் தானா?

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை துணுக்குகள் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
akbar birbal
akbar birbal

அக்பரின் அரசாட்சியும், அவருடைய அவையோரின் புத்தி கூர்மையும் பிரசித்து பெற்றது. அது பாரசீக நாடு வரை பரவியது. பார்சி மன்னன் அதை சோத்தித்து பார்க்க தன் மந்திரி ஒருவரை அக்பரின் அவைக்கு அனுப்பினான்.

பாரசீக மந்திரி அக்பரை வணங்கி, தான் வந்த விஷயத்தை கூறினான்.

அக்பரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

பாரசீக மந்திரி அவையோரைப் பார்த்து, ” உங்கள் ஆக்ரா நகரில் உள்ள வீதிகளில் எத்தனை திருப்பங்கள் உள்ளன?” என்று கேட்டான்.

அவையோர் வியந்தனர். அக்பருக்கும் ஆச்சர்யமாகி விட்டது. இது என்ன கேள்வி? இதற்கு எப்படி விடை அளிக்க முடியம்? ஆக்ரா நகர் மிகப் பெரிய ஊர். பல வீதிகளைக் கொண்டது. அதில் எத்தனையோ திருப்பங்கள். இதை எல்லாம் யார் கணக்கிட இயலும்?

பாரசீக மந்திரி மறு நாள் காலை தான் வருவதாகவும் அப்போது விடை கூறினால் போதும் என்றும் சொல்லி விட்டு சென்று விட்டார்.

அக்பர் பீர்பாலைத் தேடினார். மந்திரிகள் கூறினர், பீர்பால் அடுத்த ஊருக்குச் சென்றிருப்பதாகவும் மாலை வந்து விடுவார் என்றும்.

அதற்குள் அக்பர் சிப்பாய்களை அழைத்து ஆக்ரா நகரின் அனைத்து வீதிகளையும் அதன் திருப்பங்களையும் கணக்கெடுக்கும் படி ஏவினார். மந்திரிகளும் அதே வேலையில் முழுகினார்.

மாலை பீர்பால் திரும்பி வந்தார். மன்னர் மூலம் செய்தி அறிந்தார்.

“மன்னா! கவலையை விடுவீர்களாக. நாளை காலை நான் அந்த பாரசீக மந்திரிக்கு பதிலளிக்கிறேன். நீங்கள் முதலில் ஆக்ரா வீதிகளுக்கு அனுப்பிய சிப்பாய்களை திரும்ப அழையுங்கள். பாவம், ” என்றார்.

மன்னர் அவ்வாறே செய்தார். ஆனால் மனதிற்குள் அவருக்கும் கலக்கம். இதை எப்படி பீர்பால் சமாளிக்கப் போகிறார் என்று கவலைப் பட்டார்.

மறு நாள் பாரசீக மந்திரி கம்பீரமாக வந்தார். பீர்பாலும் சளைக்காமல் அவரை எதிர் கொண்டார்.

” மன்னா! என் கேள்விக்கு விடை தயாராக இருக்கிறதா? உங்கள் ஆக்ரா வீதிகளில் எத்தனை திருப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார் பாரசீகர்.

மன்னர் பீர்பாலின் பக்கம் திரும்பினார். பீர்பால் கூறினார், ” இரண்டே இரண்டு திருப்பங்கள் தான்”

“என்ன? இத்தனை பெரிய ஆக்ரா நகரில் இரண்டே இரண்டு திருப்பங்கள் தானா?” ஒரே சமயத்தில் அனைவரும் கேட்டனர்.

“ஆமாம். இடது, வலது, இரண்டே திருப்பங்கள்” என்று பதிலளித்து அரசரின் பெயரைக் காப்பாற்றினார் அறிவுள்ள பீர்பால்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.