சாத்தான்குளம்: தனியார் சிகிச்சைக்கு மனைவி கதறிய நிலையில்…. எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனாவால் மரணம்!

சற்றுமுன் தமிழகம் மதுரை
pauldurai-died
pauldurai-died

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இரு தினங்களுக்கு முன்னர் தான் அவரது மனைவியும் மகனும் பால்துரையை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தி காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில், வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி எஸ்.எஸ்.ஐ., பால்துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் ஞாயிறு நள்ளிரவில் உயிரிழந்தார்.

முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர், சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால்துரையின் மனைவி, மருத்துவ சிகிச்சையில் உள்ள தனது கணவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

pauldurai-son-and-wife
pauldurai-son-and-wife

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற காவலில் உள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து தனது கணவரை மாற்றம் செய்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வலியுறுத்தி மதுரை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதுமான வசதிகள் இன்றி எனது கணவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு சர்க்கரை ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருக்கின்றன. இதனால் அவர் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நேரும் அபாய நிலையில் உள்ளார்.

எனவே மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலையிட்டு அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த ஜூலை 24ஆம் தேதி பால்துரைக்கு தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், தொடர்ந்து சரியாக 15 தினங்களில் பால்துரை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.