பூங்காவ காணோம்! மீட்டுக் கொடுங்க.,! சிறார்களின் சோகம்!

நெல்லை புகார் பெட்டி
poongava-kanoom
poongava-kanoom

தென் தமிழகத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் திருக்குற்றாலம். ஆன்மிக ரீதியாகவும் சுற்றுலா ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்ற திருக்குற்றாலத்தை, தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களாக இருந்திருந்தால் இந்நேரம் உலக அளவில் பிரபலப்படுத்தி வேறு லெவலில் கொண்டு சேர்த்திருப்பார்கள்…. அட நம்ம பக்கத்துக்கு மாநிலம் கேரளாவாக இருந்தால் கூட, சுற்றுலாத் தலத்துக்கு உரிய அழகுணர்ச்சியுடன் மெருகூட்டி, இந்நேரம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, மார்க்கெட்டிங் செய்திருப்பார்கள்.

ஆனால் நெல்லை மாவட்ட நிர்வாகமோ மெத்தனம்தான். சரி… இப்போது புதிதாக தென்காசி மாவட்டம் தோன்றிவிட்டதே… தென்காசி மாவட்டத்துக்கு உரிய சுற்றுலா விளம்பரப்படுத்தலுக்கு நம்ம மெயினருவி படத்தையும் தென்காசி கோயில் கோபுரத்தையும் போட்டு இந்நேரம் விளம்பரங்கள் பெரிதாக வந்து, மாவட்டம் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்றாவது தெரியவேண்டாமா என்று இந்த மாவட்டத்துக்காரர்கள் ஆசைப்பட்டால்…. ம்ஹும்… அது கனவிலும் நடக்காது.

இருக்கும் அழகையே சிதைக்கும் கல்நெஞ்சக்காரர்களாகி விட்டார்கள் அரசு அதிகாரிகள்.

குற்றாலம் 1வது வார்டு திருவள்ளுவர் நகரில் பூங்கா ஒன்று செயல்பட்டு வந்தது. திடீரென பூங்காவை காணவில்லை. அருகே சென்று விசாரித்து பார்த்தவர்கள் கூறியபோது…

குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நிதியைப் பெருக்கும் பொருட்டு அந்தப் பூங்காவை ஏலத்திற்கு விட்டுவிட்டார்களம். பூங்கா முழுவதும் ஏலத்திற்கு எடுத்த நபர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு இரண்டு கடைகள் தன்னுடைய வாகனங்களை நிற்பதற்கு செட் மற்றும் மாட்டுக் கொட்டகை மாட்டுத்தீவனம் போன்றவை வைத்து… பூங்காவில் மாடு வளர்த்து வருகிறார்கள்..

அங்கே வசிக்கக்கூடிய குழந்தைகள் விளையாடச் சென்றால்.. பூங்கா கதவுகளை இழுத்து மூடுகிறார் என்றும், குத்தகைக்கு எடுத்த நபர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு பூட்டு போட்டு வைத்துள்ளதாகவும், அதையும் மீறி அங்கு வசிக்கக்கூடிய நபர்கள், பொதுமக்கள் கேட்டால் குற்றாலம் பேரூராட்சியில் இருந்து பூங்காவை தனக்கு வருட குத்தகைக்கு விட்டு விட்டனர் என்று கூறுவதாக அங்குள்ள பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆகவே காணாமல் போன பூங்காவை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இப்போது கெஞ்சிக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.