மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்றால் 5 ஆண்டு சிறை: சட்டத்துக்கு ஒப்புதல்

இந்தியா

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும் அந்த மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மாட்டிறைச்சி விற்றால், அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ.க, மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சி செய்தபோது, 1995ம் ஆண்டு அம்மாநில சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். ஆனால், ஆட்டிறைச்சியின் விலையை விட மூன்று மடங்கு விலை குறைவான மாட்டு இறைச்சியை ஏழை மக்கள் வாங்குவதாகக் கூறியுள்ள மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள், இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் 1976ம் ஆண்டு முதல் பசுவதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டப்படி, தற்போது காளை மாடு மற்றும் கன்றுக்குட்டியை வெட்டுவதும் குற்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.