கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ! அபராதம் போட்ட காவல்துறை!

சற்றுமுன் தமிழகம்
Auto
Auto

கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவருக்கு, 200 ரூபாய் அபராதம் விதித்த போலீசாரின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர்; மனைவி சத்யா, 35. கர்ப்பிணியான இவர், பரிசோதனைக்காக, தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை, கணவர் சங்கருடன் ஆட்டோவில் புறப்பட்டார்.

கோடியம்மன் கோவில் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட்டோவை நிறுத்தினர். சங்கர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி ஆவணங்களை காண்பித்தார்.

இதையடுத்து, ஆட்டோவை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, 2 கி.மீ.,யில் உள்ள கரந்தை பகுதியில், பெண் எஸ்.ஐ., உமாபதி உள்ளிட்ட போலீசார் ஆட்டோவை நிறுத்தினர்.அங்கும், சங்கர் ஆவணங்களை காட்டியுள்ளார்.

அதை கண்டுகொள்ளாத எஸ்.ஐ., உமாபதி, இ – பதிவு இல்லாமல் வெளியில் வர அனுமதி இல்லை எனவும்; மாஸ்க் சரியாக அணியவில்லை எனவும் கூறி, 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அதற்கு ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ், ‘மருத்துவமனை செல்ல இ – பதிவு தேவையில்லை’ எனக் கூறி, அபராதம் செலுத்த மறுத்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ., உமாபதி, அபராதம் கட்டவில்லை என்றால், ஆட்டோவை பறிமுதல் செய்து விடுவதாக மிரட்டி, அபராத தொகையை வசூலித்துள்ளார்.

அதற்கு ரசீது வழங்கி, ஆட்டோவை விடுவித்தார்.சங்கர் கூறுகையில், ”மருத்துவமனைக்கு செல்ல இ – பதிவு தேவையில்லை என அரசு அறிவித்து உள்ளதால், பதிவு செய்யாமல் வந்தேன். மூவரும் மாஸ்க் அணிந்திருந்த போதும், மாஸ்க் அணியவில்லை என, போலீசார் அபராதம் விதித்தனர்.

நாங்கள் சொல்வதை போலீசார் காது கொடுத்து கேட்கவில்லை,” என்றார்.ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் கூறுகையில், ”போலீசார் அராஜகமாக நடந்து கொள்வதால், இனி நோயாளிகளை கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயக்கம் ஏற்படுகிறது,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.