4 டன் ரேஷன் அரிசியை ரயிலில் கடத்தல்! வருவாய் துறையினர் கண்முன்னே அட்டூழியம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
rice Abduction
rice Abduction

வருவாய்த் துறையினரை மிரட்டி 4 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு ரயிலில் கடத்திச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச்செல்லப்படுவதாக வந்த தகவலின் பேரில், நாட்றாம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது ரயிலில் கடத்திச் செல்ல அங்குள்ள மறைவான இடத்தில் 80 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை வருவாய்த் துறையினர் கண்டனர்.

இதைத்தொடர்ந்து, அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ய முயன்றபோது, அங்கு வந்த 30-க்கும் மேற் பட்டோர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரசியை வீட்டுக்கு வாங்கிச்செல்வதாக கூறிய அவர்கள், எதற்காக ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்தீர்கள் என கேட்டபோது பதிலளிக்க மறுத்து அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.

அப்போது, அங்கு ஆந்திரா நோக்கிச்செல்லும் ரயில் வந்ததும், 80 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை அந்த ரயிலில் ஏற்றிக்கொண்டு ஆந்திராவுக்கு கடத்திச்சென்றனர். வருவாய்த் துறையினர் கண்முன்னே ரேஷன் அரிசி ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வட்டாட்சியர் சுமதி உத்தரவின் பேரில் நாட்றாம் பள்ளி காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்திச்சென்ற மர்மநபர்கள் யாரென விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.