
உதவி கேட்டு பதிவு போட்ட பெண்ணுக்கு மிரட்டல் வருவதாக, அதே பெண் மீண்டும் போட்ட பதிவு, சமூக வலைதளங்களில் பரவுகிறது.’
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நரிக்குளம் பகுதி வீடுகளுக்கு காய்கறி வரவில்லை, பொருட்கள் வரவில்லை, தண்ணீர் எடுக்க சென்றால் போலீசார் மிரட்டுகின்றனர்.’ரேஷன் கார்டு இல்லை. கொரோனா நிவாரணம் 2,000 ரூபாய் கிடைக்கவில்லை’ என்ற வீடியோ பதிவை, நேற்று முன்தினம் ஒரு பெண் ‘வாட்ஸ் ஆப்’பில் வெளியிட்டார்.
இது, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதே பெண் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். முதல் நாள் சிரித்தபடி பேசிய அந்த பெண், இதில் அழுதபடி பேசினார்.’நான் உதவிதானே கேட்டேன், அதற்கு இப்படி மிரட்டலா, நான் என்ன தப்பு செய்தேன், கொலை வழக்கில் உள்ளே பிடித்து போட்டு விடுவேன் என்று மிரட்டுகின்றனர்.

அரசு உதவி செய்யாதா என்றுதான் பதிவு போட்டேன், இப்படி அரசியல் செய்வார்கள் என்று நினைக்கவில்லை’ என கூறியுள்ளார்.
இதனால் வாய்திறந்து உண்மையைக் கூறுபவர்களை தடுத்து விடும் அராஜக போக்கு நிலவுவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு வீடியோக்களும் பரவி வருகின்றன. சில அமைப்புகள் சார்பில் இந்த பகுதி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.