பெங்களூரு: கர்நாடகத்தில் மேகதாது அணையைக் கட்டுவதில், மாநில அரசு மும்முரமாக உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடக அரசின் 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணைகள் கட்டி, கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
