
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கவர்னர் இல்லத்தில் நடந்த சீக்கியர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாங்கள் யார் மீதும் போரை துவக்க மாட்டோம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத பலம் பெற்ற நாடுகள். இந்த இரு நாடுகள் இடையே பதற்றம் நீடிப்பது உலகிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் முதலாவதாக அணு ஆயுதங்களை ஒரு போதும் பயன்படுத்தது. என உறுதி கூறுகிறேன்.

ஒரு பிரச்னைக்கு போர் எப்போதும் ஒரு தீர்வாக அமையாது என்பதை இந்தியாவுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
போரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கும் இழப்பு தான். போர் மூண்டால் அடுத்தடுத்து பல பிரச்னைகளும் உருவாகும்.
இது குறித்து முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவாக சில பிரச்னைகள் உள்ளன என்பதை எடுத்துக் கூறினேன்.
வெப்பமயமாதல் குறித்து பேசினேன். புகையும் வெடிகுண்டின் மீது அமர்ந்துள்ளோம் என்று தெரிவித்திருந்தேன்.

இது போன்ற பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காணா விட்டால் இரு நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என கூறியுள்ளேன்.
காஷ்மீர் பிரச்னை குறித்தும் நாம் இருவரும் ஒன்று பட்டு தீர்வு காணலாம் என்றும் கூறினேன்.
ஆனால் என்னுடைய முயற்சிகள் இந்தியா தரப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
நாம் என்ன சொன்னாலும் இந்தியா ஒரு ‘சூப்பர் பவர்’ நாடு போல நடந்து கொள்கிறது.
பேச்சு நடத்த வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்பதை நமக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.



