
தேனி அருகே சினிமா குழுவினர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கேமராமேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரபல நடிகர் படுகாயமடைந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், பருத்திவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தவசி. 59 வயதான இவர், தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஆவார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

அந்தப்படத்தில் சாமியாடியாக நடித்த தவசி, கருப்பன் குசும்புக்காரன் என்று கூறிய டயலாக் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பேருதவியாக இருக்கிறது அந்த டயலாக்.

இந்நிலையில் தேனி மாவட்டம் கோம்பை மலையடிவார பகுதியில் டிவி சீரியலுக்கான ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமரா மேன்கள் உள்ளிட்டோர் அப்பகுதியில் தங்கியிருந்தனர். நேற்று படப்பிடிப்பு நடைபெற இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் உத்தமபாளையம் நோக்கி கார் மற்றும் கேரவனில் சென்று கொண்டிருந்தனர்.
இதில் காரை நடிகர் தவசி ஓட்டி வந்தார். அவருடன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கேமராமேன் சிவா வந்துள்ளார். மற்றவர்கள் ‘கேரவன்’ வாகனத்தில் பின்னால் வந்தனர். கோம்பை இரட்டை புளியமரம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் வந்த கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் தவசி உயிருக்கு போராடினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகர் தவசியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான சிவா, நடிகர்கள் விஜய், அஜித், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த படங்களில் கேமராமேனாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் கேமராமேன் உயிரிழந்த சம்பவம் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



