samskrita nyaya - 2026

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (14): ‘பாதராயண சம்பந்த நியாய:’!

கட்டுரைகள் Featured லைஃப் ஸ்டைல்
samskrita nyaya - 2026

தெலுங்கில்: பி.எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

‘பாதராயண சம்பந்த நியாய:’

பதரீ வ்ருஷ: – இலந்தை மரம். சம்பந்தம் – உறவு.

பழக்கமில்லாத மனிதரோடு ஏதோ விதமாக உறவு எற்படுத்திக் கொள்வதற்காகச் செய்யும் உபாயமே ‘பாதராயண சம்பந்த நியாயம்’.

அஸ்மாகம் பதரீ சக்ரம் யுஷ்மாகம் பதரீ தரு:
பாதராயண சம்பந்தாத் யூயம் யூயம் வயம் வயம் !! (பழமொழி)

மேலுள்ள சுலோகத்தில் ஒரு பெரிய நகைச்சுவை உள்ளது. பார்த்து மகிழ்வோம்.

வாக்கு சாதுர்யம் கொண்ட ஒரு மனிதர் வியாபார நிமித்தம் வண்டியில் சரக்கு ஏற்றிக் கொண்டு ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு செல்கிறார். மதிய வேளை நெருங்கியது. வியாபாரிக்குப் பசித்தது. அந்த கிராமத்தில் ஒரு கிணறும் தாழ்வாரம் உள்ள வீடும் அவர் கண்ணில் பட்டது. வீட்டின் அருகில் ஒரு வைக்கோற்போர் இருந்தது. அந்த வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்தி, கிணற்றில் நீரிறைத்து கால் கழுவிக் கொண்டு மாடுகளுக்கும் தண்ணீர் காட்டினார்.

“மாமா! மாமா!” என்று அந்த வீட்டுக்காரரை உரிமையோடு அழைத்தார். வீட்டுக்காரரின் மனைவி வெளியில் வந்தாள். சுதந்திரமாக கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த மனிதரைப் பார்த்து கணவருக்கு உறவு போலும் என்று நினைத்து அவருக்கு வணக்கம் செலுத்தினாள்..

“தங்கச்சி! நல்லா இருக்கியா?” என்று அன்போடு விசாரித்தார்.

“எல்லாம் நலம் அண்ணே! வாங்க!” என்று வீட்டின் உள்ளே வரவேற்றாள்.

குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். “குளிச்சுட்டு வாங்க அண்ணே! சாப்பாடு தயாராக  இருக்கு. அவர் வரும் நேரம்தான்” என்றாள்.

அதற்குள் வீட்டுக்காரர் வந்தார். குசல விசாரிப்புகள் ஆயின. மாடுகளுக்கு வைக்கோல் போட்டுவிட்டு இருவரும் உணவுக்கு அமர்ந்தனர். உலக விஷயங்களைப் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். மனைவியுடைய உறவுக்காரர் போலிருக்கிறது என்று கணவனும், கணவரின் உறவு என்று மனைவியும் நினைத்ததால் விருந்து உபசாரம் நன்றாகவே நடந்தது.

ஓய்வு எடுத்த பின் அந்த விருந்தினரோடு தமக்குள்ள உறவு பற்றிய பேச்சு வந்தது. அப்போது அந்த சமார்த்தியமான் மனிதர் வாய்விட்டுச் சிரித்து, “நம்முடையது பாதராயண சம்பந்தம், மாமா!” என்றார்.

“அப்படியென்றால்?” என்று கேட்டனர் தம்பதிகள்.

அப்போது மேலுள்ள சுலோகத்தை உதாரணம் காட்டினாராம் அந்த ஆசாமி. அதன் பொருள் என்னவென்றால்…

“உங்கள் வீட்டின் முன் இலந்தை மரம் உள்ளது அல்லவா? நான் வந்த இரட்டை மாட்டு வண்டியின் சக்கரங்கள் கூட இலத்தை மரக் கட்டைகளால் செய்தது அதுதான் நம் இருவருக்கும் உள்ள உறவு” என்றாராம்.

விருந்தினரின் கலகலப்பான குணத்தையும் வாக்கு சாமர்த்தியத்தையும் பார்த்து அந்த தம்பதிகள் மகிழ்ந்தனர். அதிதி தன் வண்டியில் இருந்த சில பொருட்களை அவர்களுக்கு பரிசாக அளித்தார். மேற்கொண்டு பயணத்தின் போது தின்பதற்கு பலகாரம் கட்டித் தந்தாள் அந்த புதிய தங்கை. இதுதான் பாதராயண சம்பந்த நியாயத்தின் விளக்கம்.

ஓரொருமுறை இது போல் நடப்பதுண்டு. நட்பு தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் நீடிப்பதும் உண்டு.

வெளி இடங்களிலோ வெளி நாடுகளிலோ சந்திக்கும் இரு இந்தியர்கள் முதல் அறிமுகத்திலேயே நண்பர்கள் ஆவது நமக்கும் அனுபவம் தானே!

“உன்னுடையதும் தெனாலி! என்னுடையதும் தெனாலி!” என்ற கூற்று சினிமா உலகில் பிரசித்தமானது. இதுவே பாதராயண சம்பந்தம் என்பது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மொழி பேசுபவர்கள் நண்பர்களாவது இந்த நியாயத்தில் சேரும்.

—-0o0—-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.