பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
பகுதி – 37, கண்ணம்மா என் காதலி – 1
சுட்டும்விழிச் சுடர்தான் கண்ணம்மா
கணம்மா என் காதலி என்ற தலைப்பில் பாரதியார் ஆறு பாடல்களை இயற்றியுள்ளார். அதிலே சுட்டும் விழிச் சுடர்தான் எனத் தொடங்கும் இப்பாடல் காட்சி வியப்பு என்ற குறிப்போடு தரப்பட்டுள்ளது. செஞ்சுருட்டி இராகத்தில் ஏகதாளத்தில் சிருங்கார இரசம், அற்புத இரசம் இரண்டும் வெருவி வருமாறு பாரதியார் இப்பாடலைப் படைத்திருக்கிறார். மூன்று பத்திகள் உடைய பாடலை முதலில் பார்ப்போம்.
சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!
சோலை மல ரொளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை – உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ, – கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசுகிறாய், – கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, – கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? – இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!
கண்ணனை நாயகியாக எண்ணிப் பாடப்பட்ட பாடல் இது. சமய இலக்கியங்களில், குறிப்பாக வைணவ இலக்கியங்களில் ஜீவாத்மாவை நாயகியாகவும் பரமாத்மாவை நாயகனாகவும் கற்பனை செய்து பாடும் மரபு உண்டு. இது நாயக்-நாயகி பாவம் எனக் கூறப்படுவதுண்டு. இதனை கண்ணன் என் காதலன் பகுதியிலும் நாம் கண்டோம். ஆனால் பாரதியார் இந்த உறவு முறையை மாற்றி பரமாத்மாவான கண்ணனை நாயகியாக வைத்துப் பாரதியார் பாடுகிறார். இது ம்ரபுக்கு மீறிய முறையாகத் தெரிகிறது.
ஆனால் 1834ஆம் ஆண்டு, சீகாழித் தாண்டவராயர் என்பவரால் எழுதப்பட்ட திருவாசக வியாக்கியானம் என்ற நூல் நமது சந்தேகத்திற்கு விடையளிக்கிறது. இநூலில் இவர் பரம்பொருளை நாயகியாக, பக்குவான்மாவை நாயகனாக, தோழியைத் திருவருளாக, தோழனை ஆன்மபோதமாக, நற்றாய் பரையாகக் கொண்டு பாடலாம் என எழுதியிருக்கிறார். பாரதியார் இதனைப் படித்துணர்ந்தவர் போலும். இதனாலேயே பாரதியார் நாயக-நாயகி பாவத்தைத் திருப்பிப்போட்டுப் பாடியிருக்கிறார்.
பாரதியார் இந்தப்பாடலில் விளக்குவது காட்சி என்ற நிலை. அதாவது நாயகன் நாயகியைக் காண்கிறான். அந்தக் காட்சியில் தன்னையிழந்து நாயகன் பாடுகிறான். கண்ணம்மாவின் எழிலை கண்ணம்மா – அங்க வர்ணனை என்ற பாடலில் பாரதியார் அழகாகப் பாடுகிறார். அந்தப் பாடல் தனிப்பாடல்கள் என்ற பிரிவில் சில பாரதியா கவிதைகள் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. அதுவும் நாயகன் நாயகியை வர்ணித்துப் பாடும் பாட்டுதான்.
எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப்பூ
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ
எங்கள் கண்ணம்மா முகஞ்செந் தாமரைப்பூ
எங்கள் கண்ணம்மா நுதல் பாலசூர்யன்.
இந்தப் பாடலில் உன் விழிகள் இரண்டும் சூரிய சந்திரர்களோ? இருளின் கருமைதான் உன் விழியின் கருமை நிறமோ? நீ கட்டியிருக்கும் கருநீலப்புடவையில் உள்ள வைரங்கள் வானில் தெரியும் நட்சத்திரங்களோ? சோலையில் பளிச்சென மலர்ந்திருக்கும் மலர்தான் உனது புன்னகையோ? உன் மார்பகத்தின் ஏற்ற இறக்கங்கள்தான் கடலின் அலையோ? குயில் உன் குரலில்தான் பாடுகிறதா? பருவம்ங்கையடீ கண்ணம்மா உன்னை தழுவ மனம்கொண்டேன்.
ஆனால் கண்ணம்மா நீ திருமனத்திற்கு முன்னர் தொடக்கூடாது என சாத்திரம் பேசுகிறாய். இந்த சாத்திரமெல்லாம் எதற்கடீ? ஆத்திர அவசரத்தில் இருப்பவர்ள் சாத்திரம் பார்ப்பார்களா? நம்முடைய வீட்டில் உள்ள மூத்தவர்கள் சம்மதித்தால் பின்னர் மணம் புரிந்துகொள்வோம். என்னால் காத்திருக்க முடியாது. இந்தா என் முத்தம் என நாயகன் கண்ணம்மாவிற்கு முத்தம் வைக்கிறான்.