images 73 - 2026

1,290 கோடியில் எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் நவீனமடைகிறது..

சற்றுமுன்

சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்களை, 1,290 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வசதிகள் நிறைந்த மாடர்ன் ரயில்வே ஸ்டேஷன்களாக மாற்றும் பணி விரைவில் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் 292 விரைவு, 453 மின்சார ரயில்கள் உள்ளிட்ட, 1,313 ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன; 733 ரயில் நிலையங்கள் உள்ளன.நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால், ரயில்களில் பயணியரின் வருகையும் அதிகரித்து வருகிறது. அதனால், ரயில் நிலையங்களில், பயணியரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், தனியார் நிறுவனங்களோடு இணைந்து, பல்வேறு திட்டப் பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையங்களை தேர்வு செய்து, ‘மாடர்ன் ஸ்டேஷன்’களாக மாற்றும் பணிகளை, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஸ்டேஷன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்தது.ரயில் நிலையங்களின் வடிவமைப்புகள், பயணியர் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய, முழு திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இதற்கிடையே, ரயில் நிலைய மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்ள இருந்த பணிகள், தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் உட்பட நான்கு ரயில் நிலையங்கள், 1,290 கோடி ரூபாயில், ‘மாடர்ன் ஸ்டேஷன்’களாக மாற்றும் பணி, விரைவில் துவங்கவுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது,நான்கு ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை, நாங்களே துவங்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையில், எந்த மாற்றமும் இருக்காது.சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி ரயில் நிலையங்களை, தலா 400 கோடி ரூபாயிலும், புதுச்சேரி ரயில் நிலையத்தை, 90 கோடி ரூபாயிலும் மேம்படுத்த உள்ளோம்.இத்திட்டத்தின்படி, இந்த ரயில் நிலையங்களில், சிசிடிவி கேமரா’க்கள், எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள், குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்.இ.டி., விளக்குகள், ‘பேட்டரி’ கார் வசதி, ஓய்வு அறைகள், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.மெட்ரோ ரயில் நிலையங்கள் போல், சிறப்பான வடிவமைப்போடும், பல்வேறு வசதிகளோடும் மாற்றப்படும். இதற்கான, டெண்டர் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். அடுத்த சில மாதங்களில், பணிகளை துவங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

images 73 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.