739774 eps - 2026

அதிமுக பொதுக்குழு தடை தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க மனு

சற்றுமுன்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்தது தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து” உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில்,கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கை நாளை (ஆக.4) முதல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க உள்ளார்.இந்த நிலையில் அந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். அவர்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரர்களை குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிப்பதாவும் தெரிவித்திருப்பது வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துகள்.எனவே அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. வேறொரு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

739774 eps - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.