
நிலவை நோக்கி இன்று விண்ணில் பாயுது சந்திரயான் – 3 விண்கலம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, ஒரு பாதி தோல்வியில் முடிந்தது. அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.
தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கெனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட், இன்று பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிட ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கியது.
பூமியில் இருந்து புறப்படும் ராக்கெட், 173 கி.மீ., தொலைவு உள்ள சுற்றுவட்டப் பாதையில், சந்திரயான் – 3 விண்கலத்தை நிலை நிறுத்தும். அங்கிருந்து சுற்றுவட்டப் பாதையில், 36,500 கி.மீ., தொலைவு வரை விண்கலம் அனுப்பப்படும். பின், உந்து இயந்திரம் ராக்கெட் போல் செயல்பட்டு சந்திரயான் – 3 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு திருப்பி நிலவை நோக்கி பயணிக்க வைக்கும்.
ஆக.23 அல்லது 24ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வை காண, உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளதாக செய்தி வெளியாகி கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த பழனிவேல் -ரமணி தம்பதியின் மகன் வீர முத்துவேல் (42). இவர், இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
வீர முத்துவேல் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். சென்னை சாய்ராம் கல்லுாரியில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும், திருச்சி ஆர்.இ.சி., பொறியியல் கல்லுாரியில் எம்.இ., மெக்கானிக்கலும் பயின்று,சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’வில் பணிக்குச் சேர்ந்தார்.