images 84 - 2026

விருதுநகர் பாத்திமாநகரில் குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர்- பொது மக்கள் அவதி..

உள்ளூர் செய்திகள்
images 84 - 2026



விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகரில் குடிநீர் விநியோகத்தின் போது கழிவு நீரும் கலந்து வந்ததால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
விருதுநகரில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுமார் 25 குடியிருப்புகளில் பாதிக்கும் மேல் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரானது, முக்கியச் சாலையில் உள்ள மேன் வெல்கள் வழியாகச் சென்று கழிவு நீரேற்று நிலையத்தை அடைகின்றன. பின்பு, அங்கிருந்து கழிவு நீர் இராட்சத மோட்டர் மூலம் பம்ப் செய்யப்பட்டு, மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விழுகிறது.
பின்னர், அந்த கழிவு நீர் பல தொட்டிகளில் விழுந்து, இறுதியாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நல்ல நீரானது, கௌசிகா ஆற்றில் விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், பாத்திமாநகர் ஆற்றுப்பாலம் அருகே உள்ள கழிவு நீரேற்று நிலையத்தில் கழிவு நீரை முறையாக பம்ப் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக, மேன்வெல்களில் கழிவு நீர் தேங்கி, அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து விடுகிறது. பின்பு, பெரிய நீர்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் போது, வீடுகளுக்கு கழிவு நீருடன் கலந்து குடிநீர் வருகிறது. இதனால், பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது யாதெனில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டிகளில் ஏராளமாய் மண் தேங்கியுள்ளது. அதை நகராட்சி ஊழியர்கள் அகற்றுவதில்லை. இதன் காரணமாக, இரு இடங்களில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து கழிவு நீர் பம்ப் செய்யும் போது, கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையம் நிரம்பி, கழிவு நீரானது, கட்டிடச் சுவற்றின் வழியாக வழிந்தோடுகிறது.
இதனால், பலமணி நேரம் இடைவெளிக்குப் பின் ஒவ்வொரு கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவு நீரை பம்ப் செய்ய வேண்டுமென உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.எனவே, நகராட்சி நிர்வாகமானது, சுத்தகிரிப்பு நிலையத்தில் தேங்கியுள்ள மணலை உடனடியாக அகற்றுவதோடு, குடிநீருடன் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.