சவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம்: மன்னர் நடவடிக்கை!

உலகம் சற்றுமுன்

சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக்கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கனவே இருந்த தடைகளை நீக்கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், மந்திரிகள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ராணுவம், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அதற்கான காரணம் என்ன என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ராணுவதுறை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் தான் உள்ளது. இருந்தாலும் அவர் பணிநீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மன்னர் சல்மான் தான் இதற்கான உத்தரவு பிறப்பித்தார்.

ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் சவுதி அரேபிய படைகள் போரிட்டு வருகின்றன. இருந்தும் இன்னும் வெற்றி அடைய முடியவில்லை. இதனால் தளபதிகள் நீக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.