மதுரை ரவுடிகள் சுட்டுக் கொலை; டிஜிபி.,க்கு எஸ்பி., அனுப்பிய அறிக்கை!

சற்றுமுன் தமிழகம் மதுரை

மதுரை:

மதுரையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் இருவரை, என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் போலீஸார். முத்து இருளாண்டி (எ) மந்திரி, சகுனி கார்த்திக் என்ற அந்த இரு ரவுடிகளையும் போலீசார் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் சரணடைய வரச் சொல்லி, என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக போலீஸார் மீது குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்கவுண்டரில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரிடம் இருந்து துப்பாக்கிகளை விசாரணைக்காக பறிமுதல் செய்தனர். என்கவுண்டர் நடந்த இடத்தில், துப்பாக்கி குண்டு இருந்த காலி உறைகளையும் கைப்பற்றினர்.

இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட முத்து இருளாண்டி மற்றும் சகுனி ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, அரிவாள் ஆகியவை அலங்காநல்லூர் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த என்கவுண்டர் குறித்து டி.ஜி.பி.க்கு மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் அறிக்கை அனுப்பியுள்ளார்.
சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கும் மாவட்ட எஸ்பி., அறிக்கை அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட முத்து இருளாண்டியின் மனைவி முத்துலட்சுமி, உறவினர் ரவிச்சந்திரன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சரணடைய வரச்சொல்லி போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.