கருணையே இல்லை; சகித்துக் கொள்ள முடியாது: சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆவேசம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை

இது கருணையே இல்லாத செயல், சகித்துக் கொள்ளவே முடியாது என்று ஆவேசமாகக் கூறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் இணையத்தில் சட்ட விரோதமாக பதிவேற்றப்பட்டது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் ரஜினியின் மகள் சௌந்தர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் மிகப் பிரமாண்டமான படமாக தயாராகியுள்ளது 2.0 திரைப்படம். ஹாலிவுட் புகழ் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பாலிவுட் புகழ் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகத் தலை காட்டியுள்ளார். 2.0 திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது. மேலும், சன் டிவியில் மார்ச் 4, ஞாயிறு இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கும் விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு 2.0 கிராபிக்ஸ் மேக்கிங் காட்சிகள் வெளியிடப்பட இருக்கின்றன.

இந்நிலையில் இன்று காலை 1.27 நிமிடங்கள் ஓடும் 2.0 படத்தின் டீசர் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது படக் குழுவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசரும் இணையத்தில் வெளியானது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ’2.0 திரைப்படத்தின் டீசர் அதிகார பூர்வ ரிலீஸுக்கு முன்பாகவே திருட்டுத் தனமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது. ஒரு சில நொடி உற்சாகத்துக்காக, திரைப்படத்தை உருவாக்குபவர்களின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்றச் செயல். டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.