4 ஆண்டுகள் பதவியை அனுபவித்துவிட்டு நாடகம் ஆடுகிறார் சந்திரபாபுநாயுடு: ரோஜா குற்றச்சாட்டு

இந்தியா சற்றுமுன்

roja - 2026

பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு நான்கு ஆண்டுகள் மத்திய அமைச்சரவையின் பதவியை அனுபவித்துவிட்டு தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற நாடகத்தை ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு ஆடுவதாக நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசில் கடந்த 4 ஆண்டு காலமாக பதவி அனுபவித்து வந்த தெலுங்கு தேச அமைச்சர்கள் 2 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது என்பது வெறும் நாடகம். ஆந்திர மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள் வர உள்ளன. இதனால், மக்களை சந்திக்க மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

தொடக்கத்திலிருந்தே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். சிறப்பு அந்தஸ்துக்கு பதில், சிறப்பு நிதியே போதுமானது என சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றினார். தற்போது மக்கள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருவதால், வேறு வழியின்றி சந்திரபாபு நாயுடு இறங்கி வந்துள்ளார். ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏன் தெலுங்கு தேசம் வெளியேறவில்லை ? இதிலிருந்தே தெரிகிறது இது அப்பட்டமான நாடகமென்பது. தெலுங்கானாவில் மேலவை உறுப்பினர் தேர்தலின்போது, சந்திரபாபு நாயுடு லஞ்சம் கொடுப்பது தொடர்பான ஆடியோ வெளியானது. அப்போது, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் சரண் அடைந்தார். அதனால்தான் அவரால், சிறப்பு அந்தஸ்து குறித்து மத்திய அரசிடம் போராட முடியவில்லை.

இவ்வாறு எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.