odisha day - 2026

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

சுற்றுலா லைஃப் ஸ்டைல்
odisha day - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, ஆதம்பாக்கம்

இன்று ஏப்ரல் – 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி என்னும் இடத்தில் அந்த மாநிலத்தின் இயற்கையையும் கலையையும், கலாச்சாரத்தையும், மக்களிடம் பழகியதையும் அசைப்போடும் ஒரு நினைவாய் எனக்கு அமைந்தது.

ஒடிஷாவின் தாமன்ஜோடியில் இயங்கி வரும் நேஷனல் அலுமினியம் கம்பெனி ( NALCO) மற்றும் இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ், இரண்டும் இணைந்து 2022- ஆம் ஆண்டு ‘ஆஸாத் கா அம்ருத் மஹோத்ஸவ’த்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சியை மூன்று நாட்களுக்கு நடத்தியது. இதில் நான் பன்மொழி கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கத்திலும், இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பில் கலந்துக் கொண்டேன்.

நாங்கள் அப்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் நாந்தேட் என்னும் இடத்தில் இருந்தோம். அங்கிருந்து தாமன்ஜோடிக்கு 27 மணி நேர பயணம் செய்ய வேண்டியிருந்தது. நாந்தேட் நகரத்திலிருந்து விசாகப்பட்டினம் வரை இரயிலிலும், அங்கிருந்து தாமன்ஜோடிக்கு மற்ற கவிஞர்களுடன் காரில் பயணம் என எங்கள் பயணத்திட்டம் இருந்தது. நான் என் ஊரில் இருந்து ரெயிலில் ஏசி கோச்சில் ஏறினேன். செகந்திரபாத் வரை என்னைத் தவிர ஒருவரும் இல்லை.

எனக்கு கொஞ்சம் கலக்கமாய் இருந்தது. ரெயில் இரவு ஒன்பது மணிக்கு செகந்திரபாத் வந்தடைந்த போது தான் எனக்கு கொஞ்சம் தைரியமும் வந்தது. பயணியரும் ரெயிலில் ஏறினர். அடுத்த நாள் காலையில் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்து அங்கிருந்து நான்கு பேர்களுடன் தாமன்ஜோடி நோக்கி கிளம்பினோம். ஆந்திர – ஓடிஷா எல்லையில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையின் அருகில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். இரண்டு மாநிலங்கள் சேரும் இடம் என்பது ஒரு சிறப்பு தானே. அன்று இரவு 8.30 மணிக்கு நாங்கள் தாமன்ஜோடியை அடைந்தோம். எங்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அறைகளில் தங்கினோம்.

அடுத்த நாள் காலையில் மலைகள் சூழ்ந்த இடமாய் தாமன்ஜோடி இருந்ததனால் ஆதவனின் உதயத்தை அற்புதமாய் கண்டு ரசித்தோம். மேகங்களானது மலைகளுக்கு மேல் சூழ்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. காலையில் ‘ஜெய் ஜெகந்நாத்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டும், அம்மாநிலத்தின் மாநில மரமான அரசமரத்திற்கும் மரியாதை செய்து நிகழ்ச்சிகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொடங்கினர்.

நானும் மேற்சொன்ன கருத்தரங்கில் என் கருத்துகளை கூறினேன். பின்னர், மாலை நேரத்தில் அற்புதமான ஒடிஷாவின் நாட்டுப்புற கலைகளை கலைஞர்கள் வழங்கினர். இரண்டாம் நாளன்று பன்மொழி கவிஞர்களின் மாநாடும் தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த கவிஞர்கள் தங்கள் தாய்மொழிகளில் கவிதைகள் வாசித்தனர். தங்களின் கவிதைகளின் சாரத்தினை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கினர்.

நானும் ‘என் பாரதம்’ என்ற தலைப்பின் என் கவிதையை வழங்கினேன். ‘தி க்ளோரியஸ் இந்தியா’ ( The Glorious India) என்ற கவிதை தொகுப்பும் வெளியிட்டனர். அன்று மாலையும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.

மூன்றாம் நாள் காலையில் எங்களை உள்ளூரில் உள்ள கோயில்கள், கடைகள் போன்றவற்றிற்கு அழைத்துச் சென்றனர். உள்ளூர் மக்களும் எங்களுடன் அற்புதமாய் உரையாடினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மூன்று நாளும் ஒடிஷாவின் அற்புதமான அறுசுவை உணவினை எங்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். அன்றே நான் என் ஊருக்கு கிளம்பினேன். அருமையான, அரிதான அனுபவமாய் எனக்கு தாமன்ஜோடி பயணம் அமைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.