kadeswara subramaniam hindu munnani - 2026

சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அரசியல் சற்றுமுன் சென்னை
kadeswara subramaniam hindu munnani - 2026

அப்பட்டமான ஒருதலைப்பட்சமாக செயல்படும் தவெக அரசு. வாக்கு வங்கியை மனதில் கொண்டு சிறுபான்மையினர் சலுகைகளை அறிவித்திருப்பதைக் கண்டிக்கிறோம் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

இன்று சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய சிறுபான்மை துறை நல அமைச்சர் ஷாஜகான், முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு பலவிதமான சலுகைகளை அறிவித்துள்ளார்.

அதில் இஸ்லாமிய மாணவியர்கள் இளங்கலை முதல் உயிர்கல்வியை தொடரும் வரையில் அரசு நிர்ணயிக்கும் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் அதற்காக இந்த ஆண்டு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது எனக் கூறினார்.

அனைத்து மதத்தினரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள். சிறுபான்மை சமுதாயம் என்ற போர்வையில் பொதுவான வரி பணத்தை முஸ்லிம் மாணவிகள் மட்டும் உயர்கல்வி படிப்பதற்கு ஒதுக்குவது என்ன நியாயம்?

பெரும்பான்மை இந்துக்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள கல்வி கற்க இயலாத பல ஏழை மாணவ மாணவிகள் இருந்து வரும் சூழ்நிலையில்
சிறுபான்மை நலத் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு
சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.

அதேபோல வக்ப் சொத்துகள் மற்றும் கிறித்துவ சர்ச் சொத்துக்களை பாதுகாக்கவும் கட்டிடங்கள் அமைக்கவும் 100 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் தர ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு வழிபாட்டு தலங்களை அமைத்துக் கொள்ள வெளிநாட்டு நிதி கோடிக்கணக்கில் வருகிறது. அதற்கும் முறையான கணக்கு வழக்குகளை சமர்ப்பிப்பது இல்லை. வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்காகவும் சமூக சேவை செய்வதற்காகவும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு கணக்கு வழக்குகளை முழுமையாக வைத்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் FCRA சட்டத்தையும் தமிழகத்தில் முஸ்லிம் கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்த்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவாலயங்கள் மசூதி அமைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகின்ற நிதியைப் பெற்று இங்கே மதமாற்றத்திற்காக அதை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக புதிதாக சர்ச்களும், பெந்தேகோஸ்தே சபைகளும், மசூதிகளும் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் இவர்களுக்கு தேவையான பணம் ஏற்கனவே இருக்கின்ற பொழுது அரசாங்கமும் சிறுபான்மை வழிபாட்டு இடங்களுக்காக நிதி ஒதுக்குவது அவர்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து தான் என்பது அப்பட்டமான உண்மையாகும்.

சர்ச் மற்றும் மசூதிகளின் சொத்துக்கள் முஸ்லிம், கிறிஸ்தவர்களால் பராமரிக்கப்படுகிறது. அதன் வருமானம் அவர்களிடம் உள்ளது‌. மேலும் அதன் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது.

பெரும்பான்மை இந்து கோவில்களின் கோடிக்கணக்கான வருமானம் அரசாங்கத்தின் அறநிலையத்துறையிடம் இருக்கிறது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல இந்து கோவில்கள் புனரமைக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கிறது. ஒருகால பூஜைக்கூட வழியில்லாமல் பல்லாயிரம் கோவில்கள் பூட்டி கிடக்கின்றன.

வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் அடிப்படை வசதிகள் இன்றி, பராமரிப்பின்றி இருந்து வருகிறது. இன்னும் பல ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பழனி திருச்செந்தூர் ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் 100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் வருகிறது.

இந்து கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு எடுத்துக் கொண்டு அரசின் திட்டங்களுக்கும் நிர்வாகத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இடங்களை அரசு அலுவலகத்திற்காக பேருந்து நிலையங்களா, நீதிமன்றங்களா, கலெக்டர் அலுவலகங்களாக ஒரு ரூபாய் வாடகை தராமல் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகளின் சொத்துக்களுக்கு நிகராக சர்ச் மசூதிகளுக்கு இடங்கள் இருக்கின்றன. அதன் வருவாய் முழுக்க அவர்கள் மதத்தை பாதுகாக்க பரப்புவதற்கு மட்டுமே பயன்படுகின்றது.

இந்நிலையில் சிறுபான்மை வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. முஸ்லிம் கிறிஸ்தவர்கள் மட்டுமே இந்த நாட்டின் குடிமக்கள் என்பது போன்றும் அவர்கள் மட்டுமே வாக்களித்து தாங்கள் ஆட்சி அமைத்ததாகவும் தமிழக வெற்றிக் கழக அரசு நினைக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. ஏற்கெனவே பல அரசாங்க நிலங்கள் வக்பு இடங்கள் என ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. பலநூறு கோடிக்கணக்கான ரூபாய் வக்பு வாரியத்திடம் உள்ளது. அந்த வக்பு வாரியத்திற்கு 40 கோடி ரூபாயை அரசு நிதி ஒதுக்கி தான் கட்டடம் கட்டும் நிலையில் அது இல்லை.

முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் சலுகைகளை தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் வழங்குகிறது. இந்த சலுகைகளையும் தாண்டி சர்ச், மசூதிகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்குவது ஒருதலைப்பட்சமான செயல்பாடு என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

இந்து கோவில்களின் மீது எந்த விதமான அக்கறையும் இல்லாமல் வருமானத்தை மட்டுமே குறி வைத்து செயல்படும் த.வெ.க அரசு தேவாலயங்களுக்கு இதுவரை இல்லாத அளவு நிதி ஒதுக்கி இருப்பது இது கிறிஸ்துவ ஆட்சி தான் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் உள்ளதாக மக்கள் எண்ணுகிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக மதத்தின் பெயரால் சலுகை வழங்குவதை தடை செய்கிறது. இத்தகைய சலுகைகள் மற்றும் நிதி வழங்குவது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். இத்தகைய வாக்கு வங்கி அரசியல் ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயல்.

அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.

ஆனால் இந்த அரசின் செயல்பாடு ஒவ்வொன்றிலும் இது கிறித்துவ முஸ்லிம் சார்பான அரசு என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இத்தகைய செயல்பாடு தமிழக மக்களை வெறுப்படைய செய்கிறது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.