pm modi in madurai meet - 2026

நடந்து வரும் பெருமை மிகு வரலாறு!

தலையங்கம் கட்டுரைகள்
pm modi in madurai meet - 2026


தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கடந்த காலத்தில் வாழ்ந்த மாபெரும் மனிதர்களைப் பற்றிப் பேசுவதும், அவர்களிடமிருந்து ஊக்கம் பெறுவதும் அவசியமானதைப் போலவே நிகழ்காலத்தின் சிறந்த தலைவர்களை அங்கீகரித்துப் பாராட்டுவதும் முக்கியமானது. அவர்களின் சிறப்பால் தேசம் பெறும் நன்மைகளை உணர்ந்து, அந்த விழிப்புணர்வைப் பகிர்ந்துகொண்டு, அந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வருங்கால சந்ததியினருக்குக் கடத்த வேண்டும்.

அதிலும் அதிக வாக்குகளில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தியவர்கள் அவருடைய தலைமையின் கீழ் எட்டிய முன்னேற்றங்களை அங்கீகரிப்பதையும் பாராட்டுவதையும் கடமையாக ஏற்க வேண்டும்.

கடந்த கால இந்தியாவுக்கும் இன்றைய இந்தியாவுக்கும் இடையே தெளிவான வேறுபாடு தென்படுகிறது. பொருளாதாரத்தில் சிறந்த தேசமாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் சக்தியாகவும் உருவெடுத்துள்ளது. உலகின் முன்னணி நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் இந்தியா உறுதியுடன் திகழ்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தலற்ற பாதுகாப்பு, வலுவான எல்லைப் பாதுகாப்பு, தனித்துவமான கலாச்சார அடையாளம், சாமானிய மனிதனையும் சென்றடையும் தொழில்நுட்பம், தடையற்ற மின்சாரம், மேம்படுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்து என அனைத்தையும் காணும்போது, ​​பிரதமரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பதவி மோகம் சிறிதுமின்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன், தேசத்தின் முன்னேற்றமே உயிர் மூச்சாகச் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறார். தனித்து வாழ்ந்து, மக்களில் ஒருவராக, அனைவரையும் உள்ளடக்கியும் ஒருங்கிணைத்தும் செயல்படும் விதமும், சரியான துறைகளுக்குச் சரியான, திறமையானவர்களை நியமிக்கும் அணுகுமுறையும், ஒவ்வொரு அடியிலும் வெளிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையும், நிதானமும் அனைவருக்கும் தெளிவாகப் புலப்படுகின்றன.

உலக வல்லரசுகள் போர் வெறி, அழிவு, பொருளாதாரத் தடை போன்றவற்றில் மூழ்கியிருக்கும் சூழலில், ஆரவாரமோ, பகட்டான அறிவிப்புகளோ இன்றி, அமைதியாக தேசத்திற்குச் சாதகமான முடிவுகளைத் தரும் வகையில் ராஜதந்திரத்தைக் கையாள்வது ஒரு அற்புதம். போர்ச் சூழலின் தாக்கத்தை மக்கள் உணராதவாறு நாட்டை முன்னோக்கி வழிநடத்திச் செல்வதை விடச் சிறந்த மக்கள் நலன் சார்ந்த நிர்வாகம் வேறென்ன இருக்க முடியும்.

நாட்டைச் சீர்குலைக்கவும், பிளவுபடுத்தவும், பின்தங்கிய அல்லது வளர்ந்து வரும் நாடு என்ற நிலையிலேயே வைத்திருக்கவும் பல்வேறு வெளிநாட்டு சக்திகளும் தீவிரவாதக் குழுக்களும் சதி செய்து, சமூக விரோத சக்திகளைத் தீய நோக்கத்துடன் திரட்டியும், அதிகார வேட்கை கொண்ட எதிராளிகளைத் தங்கள் கைப்பாவைகளாகப் பயன்படுத்தியும் செயல்பட்டு வரும் நேரத்தில், அந்த அச்சுறுத்தல்களை மிகுந்த கண்ணியத்துடனும் நிதானத்துடனும் எதிர்கொள்ளும் விதம் வியப்பளிக்கிறது.

உலகத் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக அவரை ஒரு சிறந்த தலைவர் என்று ஏற்று மதித்து வரும் நிலையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே அவரைப் போன்ற ஒரு மகத்தான தலைவரை இந்தியா ஒருபோதும் கண்டதில்லை என்ற எண்ணம் எழுகிறது.

நவீன அறிவைச் சிறப்பாகப் பயன்படுத்திய வண்ணம், இளைய சமுதாயத்தின் துடிப்பான ஆற்றலையும் முதியவர்களின் ஆழ்ந்த ஞானத்தையும் ஒருங்கே கொண்ட இத்தகைய ஒரு ஆளுமையைக் காண்பது அரிது.

முதலமைச்சராகப் பதின்மூன்று ஆண்டுகளும், பிரதமராகப் பன்னிரண்டு ஆண்டுகளும் எனத் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக அவர் மேற்கொண்டுள்ள நிர்வாகப் பயணத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகளாவிய நெருக்கடிகளின் போதும், கொள்கை முடிவுகளின் போதும் ​​நல்லெண்ணம் கொண்டவர்கள் கூடப் பொறுமையிழந்து எதிர்ப்பு தெரிவித்த தருணங்களிலும், அவர் உறுதியுடன் இருந்து சவால்களை எதிர்கொண்ட விதமும், அதன் மூலம் இந்தியாவின் தன்னிறைவுத் திறனை (ஆத்மநிர்பர்தா) வெளிப்படுத்திய விதமும், அவரது அசாதாரணமான, நேர்மையான, திறமையான, ஈடிணையற்ற நிர்வாகத் திறனைப் பறைசாற்றுகின்றன.

அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் ஆரவாரமான செயல்களையோ, மக்கள் ஆதரவை ஈர்க்கும் அரசியல் தந்திரங்களையோ அவர் நாடியதில்லை. தேசத்தையே தன் ஆன்மாவாக நேசித்து, நீதிக்கும் நேர்மைக்கும் ஒரு வடிவமாகத் திகழும் இத்தகைய தலைவரைக் காணும் பாக்கியம் இந்தியர்களுக்குக் கிடைத்துள்ளது. அதற்காக இந்தியர்களைப் பாராட்டி வாழ்த்த வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு யோகிக்குரிய ‘ஸ்தித பிரக்ஞன்’ மனநிலை, ஆன்மீகப் பார்வை, தர்மம் குறித்த ஆழ்ந்த உணர்வு ஆகியவற்றை அவர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சுயநலமற்ற தன்மையே இவரை ஒரு ராஜயோகி, ராஜரிஷி, அறநெறி தவறாமல் ஆளும் முனிவர் என்று விவரிக்கத் தூண்டுகிறது.

இத்தகைய தலைவருடைய ஆட்சியின் கீழ் வாழும் நாம், கண்கூடாகத் தெரியும் இந்த உண்மைகளை வெளிப்படையாக எடுத்துரைத்துப் பாராட்டாவிட்டால் அது குற்றம்.

நம் தேசம் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதோடு, நாட்டின் பொருளாதாரச் செழிப்பையும், அமைதியையும் கலாசார நற்பண்புகளையும் காப்பது அவசியம். இந்தியாவின் பண்டைய செல்வங்களான அறிவியல் சாஸ்திரங்களை ஆய்வு, பரிசோதனை, பயிற்சி, நடைமுறைப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் மேலும் விரிவுபடுத்த வேண்டும். நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமைகளையும், மாபெரும் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளையும் தற்போதைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். இதுபோன்ற பல குறிக்கோள்கள் நிறைவேற வேண்டுமென்றால் இத்தகைய சிறந்த தலைவர் முழுமையான ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு தேசபக்தரும் விரும்ப வேண்டும்.

நமது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 76 து பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறவுள்ள ‘சேவா சங்கல்ப் அபியான்’ (சேவைக்கான உறுதிமொழி இயக்கம்) மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த நிர்வாகத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் நாட்டு நலனுக்கான மேலதிக முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான ஊக்கத்தைப் பெற வேண்டும்.

இது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்பு சார்ந்த விஷயமல்ல. நாட்டின் மீதும் தர்மத்தின் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட தனிமனிதர் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

(Source: தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ்)