
— சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
தொழில்நுட்பம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அரசியலை, பொருளியலை, கலாச்சாரத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையே அது மாற்றிவிட்டது. எனவே தேசியம் உட்பட பல்வேறு கருத்துக்களை இன்று என்ன பொருளில் புரிந்து கொள்வது என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. சுதந்திரம் அடைந்து எட்டு தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த கேள்வியை எழுப்புவது மிகவும் பொருத்தமே. ஏனெனில் ‘தேசியம்’ என்பதை நாம் இந்தியாவுடன் பொருத்திப் பார்க்கிறோம். இன்று இந்தியாவே மாறி உள்ளது. தேசியம் என்பது கடந்த காலத்தில் உறைந்து கிடப்பதல்ல என்பதை நாம் அறிவோம். மாறாக அது அவ்வப்போது தேசத்தில் எழும் சூழ்நிலைகளுக்கு சவால்களுக்கு ஈடு கொடுப்பதாக இருப்பது.
கடந்த தசாப்தங்களில் நம்மால் நினைத்து பார்க்கவே முடியாத மாற்றங்கள் இப்போது ஏற்பட்டுள்ளன. இந்தியா மிகவும் மாறியுள்ளது. இறையாண்மை வேண்டுமென்று இந்தியா சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது. குடியரசு அமைந்ததும் ஒற்றுமையை தக்க வைத்துக் கொள்ளவும், அமைப்புகளை நிறுவனங்களை கட்டமைக்கவும், வறுமையை போக்கவும் போராட வேண்டியிருந்தது. இன்று இந்தியா பொருளாதார வல்லரசாக முடியுமா , தேவையானவற்றை தானே உற்பத்தி செய்து கொள்ள முடியுமா, எதிர்காலத்துக்கு தேவையான தொழில்நுட்பத்தை வார்த்தெடுக்க முடியுமா, பலமுனை அதிகார மையங்கள் கொண்ட உலகில் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற முக்கியமான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளது. சுருக்கமாக சொன்னால் தன் கலாச்சாரத்தை இழந்து விடாமல் நவீனமயமாக முடியுமா என்ற கேள்வியை எதிர்கொண்டுள்ளது.
இந்த பின்னணியில்தான் தேசமும் தேசிய சிந்தனைகளும் எப்படி பரிணாம மாற்றம் பெற்றுள்ளன என்பதை கடந்த இருபத்தைந்து ஆண்டு கால இந்தியா பொது வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறது. தேசத்தின் எதிர்பார்ப்பு, அதன் அரசியல் வெளிப்பாடாக சேவை, கடமை, முதலில் தேசம், வளர்ச்சி, தற்சார்பு (ஆத்ம நிர்பார்) , பெண் சக்தி, தொழில்நுட்பத்திறன் , கலாச்சார பெருமிதம், நம்பிக்கை ஆகியவையும் 2001 இல் குஜராத்தில் தொடங்கி பிறகு தேசிய அளவிலான மோடியின் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமும் ஒத்துப் போகின்ற காலமாக இருக்கிறது.
எல்லாவற்றையும் இணைத்து முழுமையாக பார்க்கும் போது இந்தியாவில் தேசிய சிந்தனைகள், தேச பக்தி பற்றிய ஒரு அசாதாரணமான படம் தெளிவாக வெளிப்படுகிறது. தேசம் தன் மக்களுக்கு நன்மையை செய்யும் திறன் பெற்றதாக இருக்க வேண்டும் என்பது அதன் மையக் கருத்தாக இருக்கிறது. ஆட்சி என்பது வெறும் நிர்வாக செயலாக மட்டும் இல்லாமல் தேசத்தின் நம்பிக்கையை, நோக்கத்தை, பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தேசியம், தேசிய சிந்தனை என்பது தேசம் குறித்த பூடகமான கருத்து என்பது மாறி அன்றாட வாழ்க்கை அனுபவம் ஆகிவிட்டது. ஆதார், ஜன்தன், நேரடி பலன் பரிமாற்றம், யூ பி ஐ ஆகியவை — எளிதாக அணுகக் கூடிய, நேரடியான, தெளிவாக தெரியக்கூடிய பலன்கள் — அரசுக்கும் மக்களுக்கும் மத்தியில் இருந்த இடைவெளியை குறைத்து விட்டது. டிஜிட்டல் இந்தியா என்பது ஒரு தொழில்நுட்ப முன்னெடுப்பு என்பதற்கும் அப்பால் குடிமக்களுக்கு அரசுடனான தினசரி தொடர்பை வலுப்படுத்துவதாக உள்ளது.
இரண்டாவதாக, தேசியத்தின் மொழி கண்ணியம் என்பதாக மாறி உள்ளது. தூய்மை இந்தியா, ஜல்ஜீவன் மிஷன் (குடிநீர் திட்டம்) , உஜ்வாலா (மின்சாரம்), பி எம் ஆவாஸ் ( வீடு கட்டும் திட்டம்) , ஆயுஷ்மான் பாரத் (மருத்துவ வசதி) மற்றும் இலவச ரேஷன் போன்ற மோடி அரசின் நலத்திட்டங்களை இந்த பொருளில் புரிந்து கொள்ளலாம். கழிப்பறை வசதி என்பதை சுகாதாரம் என்பதாக மட்டுமின்றி கண்ணியம், சமையல் எரிவாயு ஆரோக்கியம் மட்டுமல்ல தொடர்ந்து வெப்பத்தில் வாடிய பெண்களுக்கு பெரும் ஆசுவாசம் , வீடு என்பது பாதுகாப்பையும் சொந்தம் கொண்டாடும் உரிமையையும் அளிக்கிறது. ஆரோக்கியம் நோயில் இருந்து உடல்நிலையை பாதுகாப்பது மட்டுமல்ல பொருளாதார சீரழிவை தடுக்கக் கூடியது. எனவே நலத்திட்டங்கள் என்பது அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் அனுபவமாக ஆகியுள்ளது.
மூன்றாவதாக, தேசியம் என்பது ‘நலத்திட்டங்கள்’ என்பதிலிருந்து ‘பங்கேற்பாளர்’ என்பதாக மாறி உள்ளது. பெண் சக்தி நல்ல எடுத்துக்காட்டு. பெண்கள் பயனாளிகள் என்பதிலிருந்து சுய உதவி குழுக்கள் மூலமாக தொழில் முனைவோராக, அறிவியல், தொழில்நுட்பம், விமானிகள், ஆயுதப்படைகள், விண்வெளியாளர்கள் என்று தேசத்தில் திறனை அதிகரிப்பதில் பங்களித்து வருகின்றனர் . நாரிசக்தி வந்தன் அதிநியம் என்பது அரசியல் களத்தில் பெண்களின் பங்களிப்பை விரிவாக்குகிறது. இந்தியாவின் கண்ணோட்டத்தில் சக்தி என்பது பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதல்ல. அதுவே அதிகாரம். இது பெண்களால் முன்னெடுக்கப்படும் வளர்ச்சி என்பதாகும்.
நான்காவது, தேசியம் என்பது தேசத்தின் பேரார்வத்தை , நாட்டத்தை ஜனநாயகப்படுத்துதல் என்பதாகி உள்ளது. இது பிரதமர் மோடியின் சமூக நீதி கருத்துக்கு முக்கியமானதாகும் . பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பின்தங்கிய சமூகத்தினரை நலத்திட்டங்கள் மட்டுமே சமுதாயத்தில் ஒருங்கிணைத்து விடாது . கல்வி, திறன், வீட்டு வசதி, தொழில் முனைவு, தொடர்பு, சந்தையை அணுக வசதி வாய்ப்புகள் இவை தேவையாகும் . வளர்ச்சிக்கான மாவட்டங்கள் என்று அடையாளப்படுத்தப்படுத்துவதும் இதே சிந்தனையின் எதிரொலிதான். காலம் காலமாக சில இடங்கள், பகுதிகள் பிற்பட்டவை என்று அடையாளப்படுத்தப்படுபவை அப்படியே தான் இருக்க வேண்டியதில்லை. அங்குள்ள வளர்ச்சி குறைபாடுகளை அடையாளம் கண்டு, அளவிட்டு , அதை மாற்றுவதே முன்னேற்றமாகும்.
ஐந்தாவதாக, தேசியம் என்பது பொருளாதார அர்த்தத்தை கொண்டுள்ளது. இது பற்றாக்குறையை சமாளிப்பது என்பதிலிருந்து திறன் அதிகரிப்பதாக மாறி உள்ளது. சுதந்திரம் அடைந்தபோது இந்தியா பற்றாக்குறையை சமாளிப்பதில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. புதிய இந்தியா ஒருங்கிணைந்த சந்தை, நிதி நிர்வாகத்தில் நெறிதவறாமை , உற்பத்தி, ஜிஎஸ்டி வருமானத்தை சரியாக முதலீடு செய்வது, ஐபிசி (திவால் சட்டம்) , மேக் இன் இந்தியா, பி எல் ஐ (உற்பத்தி சார்ந்து ஊக்கத்தொகை) ஆகியவற்றில் அக்கறை காட்டி வருகிறது.
ஆத்ம நிர்பார் பாரத் என்பது தனிமைப்பட்டு போவதோ அல்லது எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதோ ஆகாது. முக்கியமான விஷயங்களுக்கு பிறரை சார்ந்து இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை பெற்றிருப்பதாகும். (கொரானா – தீநுண்மீ) தொற்றுக்காலம் மருந்து, தடுப்பூசி. உணவு. எரிசக்தி, மருத்துவ கருவிகள் ஆகியவற்றில் பலவீனமான நிலையை வெளிப்படுத்தியது . குறை கடத்தி (செமி கண்டக்டர்) , கனிம தாதுக்கள், உயர் தொழில்நுட்பம் ஆகியவை நாட்டின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனை தீர்மானிக்கின்றன.
ஆறாவதாக, தேசியம் என்பது உட்கட்டமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளது. நாடு முழுவதும் சாலைகள் ,ரயில் போக்குவரத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் , மின்சாரம், எண்ம (டிஜிட்டல்) வலை பின்னல் ஆகியவை வெறும் கட்டமைப்பு திட்டங்கள் மட்டுமல்ல. அவை நாட்டின் புவியியலையே மாற்றி அமைக்கின்றன . அவை தூரத்தை குறைக்கின்றன.
சந்தைகளை இணைக்கின்றன. இதுவரை தனிமைப்பட்டு விளிம்பில் இருந்த பகுதிகளை முக்கிய தேச பொருளாதார மையங்களுடன் இணைக்கின்றன. இவை தனித்தனியான திட்டங்களாக இல்லாமல் ஒருங்கிணைந்த வலைபின்னலாக ஏற்படுவது பிரதமரின் கதி சக்தி திட்டமிடலை புரிந்து கொள்ள வைக்கின்றன.
ஏழாவதாக, தொழில்நுட்ப இறையாண்மை என்ற விஷயத்துக்குள் தேசியம் நுழைந்து விட்டது. மிகப்பெரிய அளவில் எண்ம முறைமைகளை (டிஜிட்டல் சிஸ்டம்ஸ்) பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா செயலில் காட்டியுள்ளது.
இதில் கடினமான விஷயம் முன்னணி தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்வது. சந்திராயன் (நிலவை ஆய்வு செய்வது ) , ஆதித்யா எல் 1 (சூரியனை ஆய்வு செய்வது) , ஸ்பேடெக்ஸ் (விண்வெளியில் செயற்கை கோள்களை இணைக்கும் திட்டம்) ஆகியவை இந்தியாவின் அறிவியல் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
இதில் தனியார் துறையின் ஈடுபாடு நம் வீச்சின் எல்லையை விரிவாக்கி உள்ளது. செயற்கை நுண்ணறிவு, குறைகடத்தி, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ட்ரோன்கள், அதிவுயர் தொழில்நுட்ப முனைவு எல்லாம் தேசத்தின் திறன் குறித்த விவாதத்தில் ஒரு பகுதியாக ஆகியுள்ளன.
21 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தில் பிறரை சார்ந்திருப்பது முக்கியமான விஷயங்களில் தற்சார்பை இழந்து பிறரை நம்பி வாழ்வதாக ஆகிவிடும்.
எட்டாவதாக, தேச பாதுகாப்பும் தேசத்தின் கௌரவமும் தேசியத்தில் ஆழமாக ஊன்றி நிற்பவை என்பதை யாவரும் அறிவார்கள். உணவு, எரிசக்தி, மருந்துகள், அரிய வகை கனிமங்கள், சைபர் உட்கட்டமைப்பு, தொலை தொடர்பு, சரக்கு போக்குவரத்து ஆகியவை பலவீனமாக மாறலாம். அவ்வாறு ஆகாமல் தடுக்கப்பட வேண்டும்.
ராணுவ பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல், உதிரி பாகங்களை எல்லா வகையிலும் நம்முடையதாக்குவது, புதிய கண்டுபிடிப்புகள், ஆயுத ஏற்றுமதி ஆகியவை எல்லாம் அந்த பெரிய திட்டத்தில் அங்கங்கள் ஆகும். இவை இந்தியாவின் திறனை அதிகரிப்பதோடு முடிவெடுக்கும் சுதந்திரத்தை தக்க வைக்க அவசியமாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதே பாணியில் தீவிரமாக எதிர்கொள்வோம் என்ற அரசின் கொள்கை பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட போது வெளிப்பட்டது.
ஒன்பதாவதாக , அயலுறவில் தேசியம் என்பது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது . இரு துருவ அரசியல் நிலவிய பனிப்போர் காலத்தில் இந்தியா அணி சாராத அமைப்பை ஏற்படுத்தியது. இன்றோ அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளோடு ஒரே நேரத்தில் உறவாட வேண்டியுள்ளது.
இந்த அதிகார மையங்களோடு உறவாடும் போது வேற எந்த ஒரு நாடும் இந்தியா இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த முடியாதபடி மோடியின் அயலுறவு கொள்கை சுதந்திரமானதாக உள்ளது. பல நாடுகளுடன் நட்பை வளர்ப்பது, அவற்றுடன் கூட்டாக செயல்படுவது அதேவேளையில் தன் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது நடைமுறையில் வெளிப்படுகிறது. பிரிக்ஸ் , குளோபல் சௌத் போன்ற அமைப்புகளில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருவது அதன் பெரும் விழைவை எதிரொலிக்கிறது.
அடுத்த தலைமுறைக்கான அமைப்புகளையும் நிறுவனங்களையும் உருவாக்குவது மட்டுமின்றி சர்வதேச அமைப்புகளின் விதிமுறைகளை சீரியதாக உருவாக்கவும் உதவி வருகிறது. வலிமையான இந்தியா தனக்கே உரிய நிபந்தனைகளுடன் உலகுடன் உறவாடி வருகிறது.பத்தாவதாக, இன்று தேசியம் என்பது மிகத் தெளிவாக கலாச்சார நம்பிக்கையை பெற்றுள்ளது.
புனித ஸ்தலங்கள், பாரம்பரிய மிக்க இடங்கள், யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், இந்திய ஞான மரபு, இந்திய கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை புதுப்பிப்பதையும் மேம்படுத்துவதையும் மோடியின் அரசு அக்கறையுடன் செய்து வருகிறது. இது நவீனத்துவத்தை தவிர்த்து விட்டு பாரம்பரியத்தை இந்தியா தழுவிக் கொள்ள வேண்டும் என்பதல்ல. இரண்டும் எதிரெதிரானதாக இருக்க வேண்டியதில்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இந்தியா தனது தொன்மையான நாகரீகத்திலிருந்து நம்பிக்கை பெற்றுக் கொண்டு செயற்கை நுண்ணறிவு, குறைகடத்தி நிறுவனங்களை கட்டமைக்க முடியும். மரபான ஞானத்தை மீட்டெடுக்கும் அதேவேளையில் விண்வெளி ஆய்வு பயணங்களையும் மேற்கொள்ள முடியும். இந்தியா தன் நகரங்களை நவீன மயமாக்கும் நேரத்தில் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பாதுகாக்கலாம்.
கலாச்சார சோகையில் தான் நவீனம் எழ வேண்டியது இல்லை. சேவையும் கடமையும் பிரதமர் மோடியின் வாழ்வின் மையமாக இருக்கிறது. விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) 2047 திட்டம் மேற்சொன்னவற்றை செயல்படுத்துவதாக இருக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்றால் தேசத்தின் மொத்த உற்பத்தி திறன் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு வேலை வாய்ப்பு அதிகமாகவும் வலுவான மனித வளமும் பெண்களின் பங்களிப்பு ஏற்றமாகவும் விவசாயத்தில் மாற்றம், தொழில்நுட்பத்திறன், பாதுகாப்பு படையின் தயார் நிலை, சமூக மாற்றம், முக்கியமான துறைகளில் மீண்டெழுதல் ஆகியவை தேவைப்படுகிறது.மோடியின் இருபத்தி ஐந்தாண்டு கால சேவை இந்திய தேசியம் மாறியுள்ளதை நமக்கு தெளிவாக புரிய வைக்கிறது. இந்தியாவின் புதிய தேசியம் நாட்டின் திறன் அதிகரிப்பை, வளர்ச்சியை , எதிர்காலம் குறித்த நம்பிக்கையை கோருகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடமையை வேண்டுகிறது.
நன்றி: கார்டியன்
கட்டுரையாளர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார்.

