
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் – ஸ்ரீ ரங்கமன்னார், ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த திருப்பூர நந்தவனத்தில் எழுந்தருளி விசேஷ ஆராதனை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கோவில் அமைந்துள்ளது. இங்கே மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கருடாழ்வார் காட்சியளிக்கின்றனர். ரங்கமன்னார் மாப்பிள்ளைக் கோலத்தில் இங்கே காட்சியளிப்பது விசேஷம்.
ஸ்ரீ ஆண்டாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்ததை ஒட்டி ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பூரம் நட்சத்திரம் அன்று ஆண்டாள் கோவில் அருகில் உள்ள ஆண்டாள் அவதரித்த நந்தவனத்திற்கு எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இன்று ஐப்பசி பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் வழிபாடு நடத்தி ஆண்டாள் சன்னதியில் இருந்து ஊர்வலமாக ஆண்டாள் அவதரித்த நந்தவனத்திற்கு எழுந்தருள, அங்கே ஏராளமானோர் பாசுரங்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்தனர். பின் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



