
- கிருஷ்ணா ராமலிங்கம்
முருகனை அரை நிமிடம் நினைத்தால் என்ன கிடைக்கும். அது எப்படி முருகன் தேடி வருவார் என்ற கேள்வி பலரின் மனதிலும் தோன்றும். வருவாரா என்ற சந்தேகமும் தோன்றும்.
தேடி வந்து அருள் செய்யும் தெய்வம் என்றாலும் முருகனின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும், எந்த கோவிலுக்கு சென்று வணங்க அவன் அருள் கிடைக்கும், என்ன விரதம் இருக்கலாம், என்ன மந்திரம் படிக்கலாம், என்ன நைவேத்தியம் படைக்கலாம் என பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நக்கீரர் எளிய முறையில் பதில் சொல்லியுள்ளார். முருகன் எளிமையான தெய்வம். அவரை ஒரே ஒரு நொடி, மனதார நினைத்து “முருகா” என அழைத்தாலே போதும், ஓடி வந்து அருள் செய்வார் என்று அவரால் எழுதப்பட்ட திருமுருகாற்றுப்படையில் கூறியுள்ளார்.
“அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்”
- நக்கீரர்
தன்னுடைய பக்தர்களுக்கு பிரச்சனை என்ற வரும் போது ஐந்து முகம் கொண்ட சிவ பெருமான் வருவதற்கு முன்பாகவே, வந்து விடுவார். தன்னை ஒரே ஒரு நொடி நினைத்து, முருகா என அழைப்பவர்கள் முன்பு என்பதே இப்பாடலின் பொருள்.
முருகா என ஒரே ஒரு முறை உண்மையான பக்தியுடன் கூப்பிட்டால் அவர்கள் முன் முருகனின் ஆறுமுகம், வேல், இரு திருவடிகள் ஆகியவை தோன்றி, “நான் இருக்கிறேன் பயப்படாதே” என்று சொல்லிவிடும் என கூறியுள்ளார்.
நக்கீரர் சங்ககாலப் புலவர், அவரை நாம் யாரும் பார்த்ததில்லை, அவரை ஒரு காலத்தில் வந்த புராண சினிமாவில் (பக்திப் படங்கள் வருவது தற்போது அரிதாகி வருகிறது) தான் பார்த்து இருக்கிறோம்.
திருமுருகாற்றுப்படையை ஒரே நேரத்தில் எவராலும் பாராயணம் செய்வது கடினம். அந்த முருகனின் கருணை இருந்தால் தான் மட்டுமே சாத்தியம்.
ஆனால் நாம் வாழும் காலத்திலேயே நம்முடனே வாழ்ந்து வந்த அந்த தேவராய சுவாமிகள் அவர்கள் திருச்செந்தூர் முருகன் அருளால் சஷ்டி கவசம் என்ற ஒரு பொக்கிஷத்தை நமக்கு அருளிச் செய்துள்ளார்.
திருச்செந்திலாண்டவன் அருளால் இயற்றப்பட்ட இந்த சஷ்டி கவசத்தை அவர் சென்னிமலையில் அருள் புரிந்து கொண்டிருக்கும் முருகன் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார், அதன் பிறகு ஆறுமுகன் அருளால் தனித்தனியாக ஆறுபடை வீடுகளுக்குரிய கவசத்தையும் நமக்கு அருளியுள்ளார்.
இந்த கந்தர் சஷ்டி கவசத்தை சொல்லுவதால் ஏற்படும் பயன்கள்…
கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்…
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
கன்னமிரண்டும் கருனைவேல் காக்க!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களை பற்றி சொல்லும் போது நமது மனது அந்தந்த அங்கங்களில் நிலை கொள்கிறது.
மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது. இப்படி மூளையின் தனி கவனத்திற்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது.
இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடலில் உள்ள சிறிய சிறிய குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா! இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள். இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.
கந்த சஷ்டி கவசத்தை தினமும் சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே கந்த சஷ்டி கவசம் என்று பெயர்பெற்றது.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு.
வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவக்கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன? (change of climate விஷயம் தற்போதைய பேசுபொருளாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது)
கிரகங்களின் மாற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை.
ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினமும் மூளை நமது உடலை உற்று நோக்கி தன்னை தானே சரி செய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்காலத்தில் இவை எல்லாமே சுத்த ஹம்பக், சண்டாள சதிகாரர்கள் கூட்டமொன்றும், மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு பகலவர்களுக்கு இது புரிவது புரிய வைப்பது ஒரு போதும் சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவு இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் கலந்த ஒன்றாகும்.
நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாம்! “காக்க காக்க கனகவேல் காக்க! நோக்க நோக்க நொடியில் நோக்க!….” எப்படி அருணகிரிநாதருக்கு இடையூறாக சம்பந்தாண்டார் இருந்தாரோ அதுபோல சம்பந்தமே இல்லாத பல்வேறு சம்பந்தாண்டர்கள் தற்போதைய காலகட்டத்தில் பல ரூபங்களில் இருக்கிறார்கள், இருப்பார்கள் இன்னும் இருந்து கொண்டு வருகிறார்கள் வருவார்கள்.
முருகனிடம் வேண்டுவோம் இந்த வீணர்களின் சூழ்ச்சியை அவர் வேரோடு அழிப்பார்….
14.11.2026 மாலை நேரத்திலோ அல்லது 15.11.2026 சஷ்டி அன்று முழுவதுமோ அல்லது காலை முதல் மாலையில் சூரசம்ஹாரம் ஆகும் வரையிலோ இந்த சஷ்டி கவசத்தை உங்கள் ஊரில் உள்ள கோவில்களில் (முடிந்தால் தான்) கூட்டுப் பிராத்தனையாகவோ அல்லது உங்கள் வீட்டில் விளக்கேற்றி விளக்குமுன் அமர்ந்து கொண்டு பாராயணம் செய்யுங்கள். அப்படி செய்தால் நாமும் நம் குடும்பமும், உறவும், நண்பர்களும், நாடும், நாட்டு மக்களும் எவ்வகையான இடையூறுகள், தடைகள் கஷ்டங்களின்றி சுபிட்சமாக இருப்பதற்கு அந்த முருகன் அருள்வார்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே… வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா….



