கந்த சஷ்டி திருவிழாவை கடற்கரையில் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவினை பாரம்பரிய முறைப்படி கடற்கரையில் நடத்த கோரி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாவான கந்த சஷ்டித் திருவிழா வருகிற 15-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
கந்த சஷ்டித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டித் திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து, கோவில் இடங்களில் தங்கியிருந்து விரதம் மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக திருவிழா நடைபெறுவது குறித்தும் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்தும் இதுவரை தமிழக அரசும் அறநிலையத்துறையும் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை .
இந்த நிலையில் கந்த சஷ்டி திருவிழாவினை பாரம்பரிய முறைப்படி நடத்திடவும், சூரசம்காரம் நிகழ்ச்சியினை கோவில் கடற்கரை பகுதியில் நடத்திடக் கோரியும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சியினர் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.