sabarimala nata thiruppu for mandala pooja - 2026

மண்டலபூஜை; சபரிமலை நடை திறப்பு! குவிந்த பக்தர்கள்!

ஆன்மிகச் செய்திகள் Featured இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimala nata thiruppu for mandala pooja - 2026

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள்கள் மண்டல பூஜை காலம் நவ. 17-இல் தொடங்கி டிச. 27 வரை நடைபெறவுள்ளது. இதற்காக தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், தற்போதைய மேல்சாந்தி இ.டி. பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்தார்.

மேல்சாந்தி நடையை திறந்ததும தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூடப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு மண்டல பூஜை மகர விளக்கு வழிபாட்டிற்கு ஓராண்டுக்கு புதிய மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி சுப்பிரமணியன் போற்றி மளிகைபுரம் மேல் சாந்தி சங்கரன் போற்றி இருவரும் இருமுடி கட்டி 18 படிக்கில் நின்றனர்.

இருவரையும் தற்போதைய சபரிமலை மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றார். இருவருக்கும் தந்தூரி கண்டரரு பிரம்மதத்தன் ஐயப்பன் மந்திரங்களை சொல்லிக் கொடுத்து மேல் சாந்தியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, நாளை (நவ. 17) அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். முக்கிய நிகழ்வான மண்டல பூஜை, டிச.27-ஆம் தேதி நடைபெறுகிறது.

டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜைக்குப் பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்குத் திருவிழாவுக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்குத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது.

தினமும் 80 ஆயிரம் பேர்

மண்டல பூஜை நாள்களில் இணையவழி மற்றும் உடனடி முன்பதிவு முறைகளின்கீழ் தினமும் 80,000 பக்தா்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

இந்த நிலையில், பம்பா, நிலக்கல் போன்ற சபரிமலை சுற்றுப்பகுதிகளில் 2,000 போலீசாரும், சன்னதியில் 1,500 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்களுக்கு காப்பீடு

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, யாத்திரையின் போது பக்தர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு இந்தக் காப்பீடு பொருந்தும். பக்தர் சன்னிதானத்திற்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே தொடங்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் மூன்று நாள்களுக்குச் செல்லுபடியாகும்.

முதல் நாளில் விபத்து மரணங்களுக்கும், அடுத்த இரண்டு நாட்களில் விபத்து மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்களுக்கும் இதன் மூலம் காப்பீடு வழங்கப்படும். இந்தக் காப்பீட்டிற்காக பக்தர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கான வருடாந்திர பிரீமியம் தொகையான ரூ. 1.5 கோடியை தேவசம் போர்டே ஏற்கும்.

பிரசாதங்களை அனுப்ப அஞ்சல் வசதி

சபரிமலைக்கு வரும் பக்தா்கள் அங்கிருந்தபடியே பிரசாதங்களை இந்தியா போஸ்ட் விரைவு அஞ்சல் பாா்சல் சேவை மூலம் தங்களின் வீட்டுக்கு அனுப்பும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தரிசனம் முடித்து திரும்பும் பக்தா்கள், பிரசாதங்களை தங்களுடன் தூக்கிச் செல்ல வேண்டிய சிரமம் குறையும்.

சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன.

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam