மோடி நாளை உண்ணாவிரதம்! நாடு முழுதும் பாஜக.,வினரும் அமர்கின்றனர்!

இந்தியா சற்றுமுன்

modi speech in loksabha - 2026

புது தில்லி: பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதத்தில் அமர்கிறார். தனது வழக்கமான பணிகளுக்கு இடையே உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார் மோடி. நாடு முழுதும் பாஜக., எம்.பி.க்கள், தொண்டர்கள் ஏப்.12 நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்பிக்கள் ஏப்.12 அன்று உண்ணாவிரதம் கடைபிடிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, பாஜக., எம்பிக்கள் மத்தியில் பேசினார் மோடி. அப்போது அவர், நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்றார். காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய மோடி, நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் ஏப்ரல் 12ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மோடியின் கோரிக்கையை அடுத்து, அனைத்து பாஜக., எம்பி.,க்களும் அவரவர் தொகுதிகளில் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

modi in loksabha - 2026

மோடியும் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றார். ஆனால் அன்றாட பணிகள் பாதிக்கப்படாத வகையில் தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார். அதிகாரிகளை சந்திப்பது, கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அவர் வழக்கம் போல் கவனிப்பார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதம், போராட்டங்கள் நடைபெற்றன. தில்லியில் ராகுல் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார். பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கம் முதலே, பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கின. காவிரி மேலாண்மை வாரியம் கோரி அதிமுக எம்பிக்களும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.