மே 11- தேசிய தொழில்நுட்ப நாள்

இந்தியா சற்றுமுன்

11 May 10 tech day - 2026நம் அனைவருக்கும் ரியல் உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினம் இன்று, அதாவது மே 11ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

மே 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம்:

தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப உலகில் எந்த நாடு அணுசக்தியில் சாதித்துள்ளதோ அதுவே உலகின் பலமிக்க நாடாக கருதப்படும் நிலையுள்ளது. எனவே, மறைந்த முன்னாள் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் குழுவினரின் கடும் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனையானது 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதிதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் காரணமாக உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது நாடாக இணைந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் இதே மே 11ம் தேதிதான் முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக 1999ம் ஆண்டு முதல் மே 11ம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது.

தொழில்நுட்பமும் அதன் தாக்கமும்:

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களை புரட்டிப்போட்ட வரலாறு காணாத மழையின்போது பல உயிர்களைக் காப்பாற்றியதும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கவும், உணவளிக்கவும் உதவியது இந்தத் தொழில்நுட்ப வரவான சமூக வலைதளங்கள்தான். மேலும், சமீப காலங்களில் தமிழகம் கண்டிராத மிகப் பெரிய போராட்டமான இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம் திட்டமிடப்பட்டு, தகவல் பரப்பப்பட்டத்தில் இந்த தொழில்நுட்பத்தின் பங்கு அளவிடமுடியாது. இது போன்ற பல நல்ல செயல்கள் நடப்பதற்குக் காரணமாய் உள்ள இதே சமூக வலைத்தளங்கள்தான் நமது உள்ளூர் தர்மாகோல் காமெடியை உலகம் முழுவதும் அறிய செய்துள்ளது என்பதையும் மறுக்கவியலாது.

எங்கெங்கெல்லாம் பயன்படுகிறது தொழில்நுட்பம்?

தினசரி வேலைக்குச் செல்லும் ஒருவரை எடுத்துக்காட்டாக கொள்வோம். காலையில் மொபைலில் அலாரம் அடித்து கண் விழிப்பது முதல், பேஸ்புக்-வாட்சப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது, அயர்ன் செய்வது, ஹீட்டர் போட்டு குளிப்பது, தண்ணீர் இல்லையென்றால் மோட்டார் போடுவது, மின்னடுப்பில் சமைப்பது, சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பது, வேலைக்கு நேரமாகிவிட்டதால் பைக்கில் வேகமாகச் செல்வது மற்றும் அலுவலகத்தில் நுழைந்தவுடன் பிங்கர் பிரிண்ட் மூலம் அட்டெண்டன்ஸ் போடுவது மட்டுமல்லாமல், அலுவலகத்தில் கணினியின் முன் நாள் முழுவதும் வேலைசெய்வது, இடையிடையே ஆன்லைனில் புதிய கேஜெட்ஸ் நிலவரம் பார்ப்பது, சாட்டிங் செய்வது வரை இன்னும் எக்கச்சக்கமான இடங்களில் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.